தொண்டர்களை மதிக்காத மாவட்ட திமுக நிர்வாகி மீது ஏற்பட்ட அதிருப்தியால் கொங்கு மண்டலத்தில் உருவாகியுள்ள உட்கட்சி புகைச்சல் புயலால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற நிலையை கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தேர்தலில் திமுக ஓரளவுக்கு மாற்றிக்காட்டியது.
இந்நிலையில், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அக்கட்சியின் எதிர்கால தேர்தல் கணிப்புகளை கானல் நீராக்கும் நிலைக்கு சென்று விடுமே என்ற அச்சத்தை திமுக தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்களும் மூத்த முன்னோடிகளும் கருதுகின்றனர்.
ஈரோடு மாவட்ட திமுகவில் என்னதான் நடக்கிறது என்பதை பார்க்கலாம்…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் நியமனத்தில் திமுக கட்சியினர் கொடுத்த பட்டியலில் இருந்த நபர்கள் பெரிய அளவில் நியமிக்கப்படாததால் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் மீது கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனிடையே இது போன்ற பிரச்னைகளை பொறுக்க முடியாக திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக இருந்த பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன. ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.
இத்தொகுதிகளில் திமுகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் சார்பில் பரிந்துரைகளுடன் கூடிய பட்டியலை மாவட்ட செயலாளர் நல்ல சிவத்திடம் நிர்வாகிகள் வழங்கி உள்ளனர்.
ஆனால், கட்சியினர் கொடுத்த பரிந்துரை கடிதத்தை அவர் கண்டு கொள்ளாமல், தன்னுடைய பட்டியலை கூட்டுறவுத் துறையிடம் கொடுத்து பணியிடங்கள் நிரப்பிக் கொண்ட தாகக் கூறப்படுகிறது.
இதனால் தகுதியுடைய கட்சியினருக்கு பணி கிடைக்கவில் லையே என்ற அதிருப்தி நிர்வாகிகளிடம் ஏற்பட்டது. .இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோபி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர் அமைச்சர் முத்துசாமியிடம் இதுதொடர்பாக முறையிட்டனர். ஆனால் அமைச்சர் முத்துசாமியோ, நீங்கள் உங்கள் மாவட்டச் செயலாளர் நல்ல சிவத்திடம் பேசி உங்க பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நைசாக நழுவி விட்டார்.
.மாவட்ட செயலாளர் நல சிவத்திடம் இது தொடர்பாக கட்சியினர் பேசியும் எவ்வித பதிலும் அளிக்காமல் அவர் சென்று விட்டதாக கூறப்படுகிறது .இதனால் ஆத்திரம் அடைந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் இது தொடர்பான புகாரை கட்சித் தலைவரும் முதலமைச்ச ருமான மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான புகார் மனுவை தயாரித்து உள்ளனர். மனுவில் ஈரோடு மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் பணிக்கு நபர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப் பட்டது.
கட்சி நிர்வாகிகளின் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள், விதவைகள், நபர்களை தேர்வு செய்து உறுப்பினர் அட்டையின் நகலுடன் மாவட்ட செயலாளர் நல்லசிவத்திடம் கொடுக்கப்பட்டது ஆனால் வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரு நபருக்கு கூட வழங்கவில்லை என்பதுதான் வேதனை என கட்சியினர் தெரிவித்தனர்.
தேர்தல் வரும் நேரத்தில் கூட இது போன்ற வேலை வாய்ப்பு களை கட்சியினருக்கு வழங்காமல் இருந்தால், எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். சாதாரண தொண்டனுக்கு இந்த வேலைகூட கிடைக்காதா? கழகத் தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர் . மேலிடம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் சேர்ந்த திமுக கவுன்சிலர்…
இதற்கிடையில் திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் கலையரசி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் திமுக கட்சித் தொண்டர்களை அவமதிப்பதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது .இதுபோன்ற திமுக வடக்கு மாவட்டத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாததால் கட்சியினர் பலரும் மாற்றுக்கட்சியில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
அதேபோல அந்தியூர் தொகுதி எம்எல்ஏ வெங்கடாஜலத்தை யாரும் கண்டு கொள்வது இல்லை என கூறப்படுகிறது. ஆகவே, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மீது கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வை திரும்ப வேண்டும். அப்போதுதான் கட்சி நிர்வாகிகளின் குமுறல் எரிமலையாகாமல் அணைக்கப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
#செய்தி: சி.ராஜி- கோபி #