Close
செப்டம்பர் 20, 2024 6:54 காலை

புத்தகம் அறிவோம்… ‘மனிதர் தேவர் நரகர்’

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“எங்கள் ஊர் புதுச்சேரி என்கிற பாண்டிச்சேரியை எனக்கு பிடிக்கும். நான் பிறந்து வாழும் ஊர் என்பதால் இருக்கலாம். ஆனால் அது நேருவுக்கும் பிடித்திருக்கிறதே!

கலங்கங்களும் வன்முறையும் மலிந்து கிடக்கும் உலகின் மத்தியில் பேரமைதி நிலவும் இந்த ஊர் எனக்குப் பிடித்திருக் கிறது’ என்றவர் பிரெஞ்சுக் கலாசாரத்தின் ஜன்னல்’ என்றும் புகழ்ந்தார். பக்.10.

வன்முறை என்பது மனித இயல்புதானா என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்ததில்லை. அப்படி இருக்க முடியாது. இருக்கக்கூடும் என்றால் மனித சமூகம் அமைதியை இழந்து விட்டிருக்கும். கலைகளும் காவியங்களும் தோன்றி இருக்க முடியாது.

மனிதகுலத்தை அசைத்துப் பார்க்க என்றே யுத்தங்கள், தனி மனித குரோதங்கள் ஏற்படவே செய்யும். அவைகளையும் மீறி நல்ல தன்மைகளை மீட்டெடுக்கவே கல்வி, இலக்கியம், சினிமா, நாடகம் எல்லாமும் உழைக்க வேண்டும். மனித குலம் தப்பு செய்யும் தான்.

ஆனால் திருத்தித் கொண்டு பயணத்தைத் தொடரும். இடையிடையே சில பிறழ்வுகள் நடக்கும். மாமனாரை பிச்சைக்கு அனுப்பும் மருமகள், தாயைத் தொலைக்கும் பிள்ளை எல்லாம் பிறழ்வுகள். இயற்கைகள் அல்ல.” பக். 203.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து, அக்டோபர் 1, 2009 முதல் “இனி ஒரு விதி செய்வோம்” என்ற முழக்கத்தோடு  “புதிய தலைமுறை” என்ற வார இதழ் வெளிவந்தது.

முதல் பிரதியின் விலை 5 ரூபாய். 5 ரூபாய்க்கு இப்படி ஒரு பத்திரிக்கை தரமுடியுமா? என்று யோசிக்க வைத்தது. பின்னர் 20 ரூபாயைத் தாண்டிப்போனது. கொரோனா காலி செய்த நல்ல பத்திரிக்கைகளில் அதுவும் ஒன்று. நின்றுபோனதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டிய அருமையான இதழ். பிரபஞ்சனின் இந்த ‘மனிதர் தேவர் நரகர்’. இறையன்புவின், ‘10,000 மைல் பயணம்’,’வையத் தலைமை கொள்’,போர்த்தொழில் பழகு’ ஆகிய நூல்கள் புதிய தலைமுறையில் தொடர் கட்டுரையாக வந்து பின்னர் புத்தகமானதே.

புதிய தலைமுறையைத் தொடர்ந்து” புதிய தலைமுறை- கல்வி” என்ற கல்வியை மட்டுமே மையமாகக் கொண்டு வெளிவந்து, அதுவும் தற்போது நின்றுபோனது.

பிரபஞ்சன், “புதிய தலைமுறையில்” எழுதிய ஒரு வாழ்வியல் தொடரின் புத்தக வடிவமே ‘மனிதர் தேவர் நரகர்’. 45 கட்டுரைகள் இதில் உள்ளது. நாம் சந்தித்திருக்கும் மனிதர்களில் மனிதர்களும் உண்டு, தேவர்களும் உண்டு நரகர்களும் உண்டு.

நாம் பார்த்த நரகர்கள் தேவர்களாக மாறியதும் உண்டு. என்னை மிகப்பெரிய விரோதியாக பார்த்த ஒருவர் இப்போது என்னை அவரின் மிக நெருங்கிய நண்பராகப் பார்க்கிறார்.
நாம் சந்திக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு அனுபவத்தை நம்மிடம் விட்டுச் செல்கிறார்கள்.அப்படி பிரபஞ்சனிடம் விட்டுச்சென்ற மனிதர்களைப் பற்றி இதில் மிக அழகாக, சுவாரஸ்யமாக எழுதி நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்.

தனக்குப் பிடித்த தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வ.சுப்பையா தொடங்கி தான் பார்த்த தலைவர்கள், இலக்கிய வாதிகள், சதாரண மனிதர்கள் என்று பலரைப்பற்றியும் அவர்களிடம் பெற்ற அனுபவங்களையும் நமக்கு நூலக்கித்
தந்திருக்கிறார் பிரபஞ்சன்.

இந்த நூலில் அவர் காலத்து வரலாறு இருக்கிறது. அரசியல் இருக்கிறது. இலக்கியம் இருக்கிறது. வாசித்தால் நமக்கும் மனிதர்களை எப்படி வாசிக்க வேண்டும் என்ற புதிய சிந்தனை தோன்றும். மனிதர்களை வாசியுங்கள்.

இந்த நூல் முதலில் புதிய தலைமுறையே வெளியிட்டது. அதுதான் என்னிடம் உள்ளது. இப்போது வேறு யாராவது பிரசுரித்திருக்கலாம்.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top