Close
நவம்பர் 23, 2024 12:42 காலை

இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடக்கம்: விக்கிரமராஜா

தமிழ்நாடு

ஏ.எம். விக்கிரமராஜா

இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடங்கப்படும் என்றார்  ஏ.எம்.விக்கிரம ராஜா.
தமிழக சிறு வணிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடங்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரமராஜா  தெரிவித்தார்.
திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆகாஷ் பல்நோக்கு மருத்துவமனை இணைந்து  வியாபாரிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமருத்துவம், இருதய சிகிச்சை, நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆகாஷ் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.
 பின்னர் விக்கிரமராஜா செய்தியாளரிடம் கூறியது,
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெருநிறுவனங்கள் இந்திய சந்தையை வெகுவாக பிடித்து வருகின்றன. இதனால் சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில் இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தேவையான பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கும், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான பொருள்களை நிர்ணயிக்கவும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடான துபாயில் அந்நாட்டு வர்த்தக சங்கங்களோடு இணைந்து வரும் செப். 23 -ஆம் தேதி வர்த்தக வாய்ப்புகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 250 இளம் தொழில் முனைவோர் அங்கு செல்ல உள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்து விற்பனை நிகழ்வுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் என்ற வலைத்தளம் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சரக்குகளை அனுப்பி வைப்பதற்கான தொகைகளை பெறுவதில் வியாபாரிகள் ஏமாற்றப்படுவதையும், சிரமங்களையும் தடுக்க முடியும்
தமிழக முழுவதும் வியாபாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஆங்காங்குள்ள மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்களை பேரமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. வியாபாரத்தை கவனிக்கும் வியாபாரிகள் தங்களது உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் விக்கிரம ராஜா.
 இந்நிகழ்ச்சியில் வியாபாரி சங்க நிர்வாகிகள் ஆதிகுருசாமி, குறிஞ்சி எஸ்.கணேசன், ஆர்.சி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top