Close
நவம்பர் 22, 2024 8:32 மணி

திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற திமுக இளைஞரணி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில்  மாநில செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
மாநில சட்டத்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலருமான எஸ். ரகுபதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  உதயநிதி  பேசியதாவது:
டிஜிட்டல் பேனர் வைக்கக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, என்ற எனது வேண்டுகோளை முழுமையாக நிறைவேற்றியது புதுக்கோட்டை மாவட்டம் தான். நீங்கள் அனைவரும்  டிசம்பர் மாதம் சேலம் மாநாட்டுக்கு குடும்பத்தோடு வர வேண்டும்.
குடும்ப ஆட்சி நடத்துவதாக பலரும் கூறுகிறார்கள். ஆமாம், திமுகவினர் அனைவருமே ஒரு குடும்பம் தான்.இளைஞர் மன்றத் தலைவர் என்ற பொறுப்பிலிருந்தும், சட்டப்பேரவை உறுப்பினர், மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாகத்தான் கட்சியின் பொருளாளர், செயல் தலைவர்,  தலைவர் பொறுப்புக்கும் முதல்வர் பொறுப்புக்கும் வந்தார் ஸ்டாலின். ஆனால் சிலர்  மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று  பதவிகளைப் பிடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
புதுக்கோட்டை
கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர்
மதுரையில் அண்மையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாடு எதற்காக நடந்தது என நடத்தியோருக்கும் தெரியவில்லை; சென்றவர்களுக்கும் தெரியவில்லை. கலைநிகழ்ச்சி, மிமிக்ரி நிகழ்ச்சிகளாகதான் மாநாடு நடந்தது.
ஒரு வீட்டுக்குள் பாம்பு திரும்பத் திரும்ப உள்ளே வர முயற்சிக் கிறது என்றால் அதற்குக் காரணம் நம் வீட்டுக்குள்ளும் வாசலி லும் இருக்கும் புதர்தான்.
தமிழ்நாடு என்னும் வீட்டுக்குள் பாம்பு என்னும் பாஜக நுழைய முற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அதிமுக என்ற புதர் தான். எனவே பாஜவோடு சேர்த்து அடிமை அதிமுகவையும் நாம் அகற்ற வேண்டும்.
தமிழக ஆளுநர் வரம்பு மீறி நடந்து கொள்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. பல்வேறு தொல்லைகளைத் தந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார் உதயநிதிஸ்டாலின்.
புதுக்கோட்டை
அமைச்சர் உதயநிதியுடன் கலந்துரையாடும் அமைச்சர் ரகுபதி
கூட்டத்தில்,  மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு. சண்முகம் வரவேற்றார். முடிவில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த. மணிராஜன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top