Close
செப்டம்பர் 20, 2024 8:25 காலை

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர்கள்..!

ஈரோடு

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர்கள்

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில்  ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த 5 பேர் குதிரையேற்றத்தில் நீண்ட தொலைவு பயணம் செய்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் பெயர்கள் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு அந்த புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஈரோட்டில் உள்ள நிலா குதிரையேற்ற பயிற்சி அகாதெமி (நிலா ஹார்ஸ் ரைடிங் அகாடமி) யில் 35 மாணவர்கள் குதிரையேற்றத்துக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த மாணவர்களில் 4 பேரும், அகாதெமியின் நிர்வாக இயக்குநர் கௌதமன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் குருநாதசுவாமி கோவில் வரையிலும் 479 கிமீ தொலைவுக்கு  குதிரையில் பயணித்து சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு
ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர் மானவ் சுப்ரமணியன்.

இவர்களில் 12 வயதே ஆன மானவ் சுப்ரமணியன், சுபத்ரா ஆகியோரும், 32 வயதான பிரியதர்ஷினி, சுவாதியும், 33 வயதான கௌதமன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஜூலை 29 -ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இந்திய நாட்டு ரக குதிரைகளில் பயணத்தை தொடங்கி ஆகஸ்ட் 9 -ஆம் தேதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோவிலை வந்தடைந்தனர்.

சாதனை படைத்த மாணவர்களில் மானவ் சுப்ரமணியன் ஈரோடு பாரதிய வித்யாபவன் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது பெற்றோர் டாக்டர் எஸ்.செந்தில்குமரன், டாக்டர் எஸ்.வி.ஆர்த்தி செந்தில் ஆகிய இருவரும் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் ஆவர்.

குதிரையேற்றத்தில் சாதித்த 5 பேருக்கும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தக நிறுவனத்தின் பிரதிநிதி கவிதாஜெயின் நேரில் வந்து சாதனை புரிந்ததற்கான பதக்கங்களையும், அவர்கள் பெயர் இடம் பெற்ற சாதனை புத்தகத்தையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

சாதனை குறித்து அகாதெமியின் நிர்வாக இயக்குநர் கௌதமன், தமிழ்மணி. நியூஸ் இணையதள செய்தியாளரிடம் கூறுகையில், குதிரையேற்ற வீரர்களுக்கு சுமார் 1 ஆண்டு வரை பயிற்சி அளித்த பிறகே குதிரையில் நீண்ட தூரம் சவாரி செய்வதற்கான சாதனை முயற்சியில் ஈடுபட்டோம்.

தற்போது 479 கி.மீ. சவாரி செய்ய திட்டமிட்டு  அதை விட கூடுதலாக 497 கி.மீ. சவாரி மேற்கொண்டு இலக்கை வந்தடைந்தோம்.

குதிரை சவாரியை காஷ்மீர் வரையிலும் மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மாணவர்கள் இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கவும், அவர்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் இந்த சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளோம். எங்களது சாதனை முயற்சி தொடரும் என்றார்.

# செய்தி- மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top