புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைத்து 80 பயனாளிகளுக்கு ரூ.81.83 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா முன்னிலையில் (28.08.2023) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.
இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட 38 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சேவையின் பயன்பாடு பொதுமக்களுக்கு முறையாக சென்றடையும் வகையில் தமிழக அரசால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய காலத்திற்குள் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 3 சதவீதத்திற்கு மேல் இருப்பின் அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதி இருப்பின் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை 50 சதவீத கட்டண தள்ளுபடியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 மதிப்பில் 10 நபர்களுக்கு ரூ.60,000 மதிப்பிலான தையல் இயந்திரங்க ளையும், தலா ரூ.6,552 மதிப்பில் 5 நபர்களுக்கு ரூ.32,760 மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,250 மதிப்பில் 6 நபர்களுக்கு ரூ.37,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8 சுயஉதவிக் குழுவினர்களுக்கு ரூ.79,20,000 மதிப்பிலான வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 25 நபர்களுக்கு ரூ.72,900 மதிப்பிலான பழச் செடிகள் தொகுப்பு, பண் புழு உரப் படுக்கை, கொய்யா பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,
வருவாய்த்துறையின் சார்பில் 23 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.59,500 மதிப்பிலான பேருந்து பயண அட்டை, காதொலி கருவி, மடக்கு ஊன்றுகோல் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.81,82,660 மதிப்பிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி,இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, துணை இயக்குநர் (தோட்டக்கலை) .குருமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.