Close
நவம்பர் 22, 2024 1:33 காலை

கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது: திருப்பூர் எம்பி சுப்பராயன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கே. சுப்பராயன் எம்பி.

கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன்.
கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே. சுப்பராயன் கூறினார்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
ஹிட்லர், முசோலினி போன்ற சர்வதேச சர்வாதிகாரிகளுக்கு முடிவுரை எழுதியவர்கள் கம்யூனிஸ்டுகள். எங்களுக்கு கடவுள் மக்கள்தான். அவர்களுக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம், குரல் கொடுக்கிறோம்.
இங்கே இந்துத்துவா என்ற பெயரில் இந்துக்களை ஏமாற்ற பாஜக முயற்சிக்கிறது.  அதை செய்ய    கம்யூனிஸ்டுகள் விடமாட்டோம். கம்யூனிஸ்ட்டுகள் மலட்டு விதைகளல்ல; மக்களுக்காக தொடர்ந்து உழைக்கும் ஜீவ விதைகள். கம்யூனிஸ்ட்டுகள் இந்த உலகில் தோன்றி 176 ஆண்டுகள் ஆகின்றன.
இந்தத் தேசத்தை ஆள வந்த பிரிட்டிஷார் இங்குள்ள மக்களை இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும் பிரிக்கத் திட்டமிட்டனர். மக்களைப் பிரித்தால்தான் அவர்கள் வாழும் தேசத்தை ஆள முடியும். அதுதான் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி. இப்போது அதே வேலையை பாஜக செய்கிறது.
கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது. இந்தியாவின் பரிபூரண சுதந்திரத்துக்காக போராடத் தொடங்கி விட்டோம். மக்களைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தை விரட்டியடிக்கவே வரும் செப். 12,13, 14 ஆகிய மூன்று தேதிகளில் மறியல் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது என்றார் சுப்பராயன்.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் த.செங்கோடன் தலைமை வகித்தார். தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எம். செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள் கே.ஆர். தர்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் என்.ஆர். ஜீவானந்தம் உள்ளிட்டோர் அரசியல் நிலைமைகள் குறித்து பேசினர்.
முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல்- அமைப்பு நிலை மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்  விவரம்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பகுதியில் பூக்கள் மற்றும் பழ வகைகளைப் பாதுகாக்கும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். பூக்கள் மற்றும் பழங்களை மதிப்புக் கூட்டும் பொருளாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
குளத்தூர், இலுப்பூர், விராலிமலை வட்டப் பகுதிகளில் ஜீவாதாரமாக இருந்த கல் உடைக்கும் தொழில் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது ,அரசு பரிசீலினை செய்து ஏற்கெனவே சட்டப்படி அனுமதிக்கப்பட்ட கல் குவாரிகளையும் புதிதாக இடங்களை தேர்வு செய்தும் அனுமதித்து கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும்.
கடலோரப் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப் படுவதும் தொடர்கிறது. இதனைத் தடுக்க சரியான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top