வேளாங்கண்ணி திருவிழா நடைபெறுவதால் ஓட்டுநர்கள் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டுமென ஏஐடியூசி தொழில்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற அனைத்து இனத்தவரும், மதத்தினரும், ஏழை, பணக்காரர் மற்றும் சாதிய பாகுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக கொண்டாடும் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ,செப்டம்பர் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு அனைத்து நாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து
சப்பரத்துடன், கால்நடையாக வருவார்கள் . போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் கவனத்துடனும், நிதானமாகவும், மெதுவாகவும், வளைவுகளில் திரும்பும் போது ஹாரன் சத்தம் செய்தும் , பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியும் செல்ல வேண்டும்.நடத்துனர்களும் பேருந்துகளில் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களிடம் கனிவாகவும், அன்பாகவும் நடந்த கொள்ள வேண்டும்,
பக்தர்கள் வேளாங்கண்ணி சென்று, பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலங்களுக்கு செல்லும் போது அவர்களுக்குஉரிய வழிகாட்டுதலையும், ஆலோசனை களையும் அளித்திட வேண்டும். வேளாங்கண்ணி சிறப்பு இயக்கத்தில் விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கி கும்பகோணம் கழகத்திற்கு நற்பெயர் பெற்றுத்தர பொறுப்புடன் பணியாற்ற ஏஐடியூசி கேட்டுக் கொள்கிறது.
அதே போல போக்குவரத்து கழக நிர்வாகமும் வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு பேருந்துகளை முறையாக பராமரித்து, பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், இயக்கிடவும் கேட்டுக் கொள்கிறோம். மற்றும் பாதசாரி யாக வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் சாலை விதி, போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, இடது புறமாக ஒருவர் பின் ஒருவராக வரிசையாக செல்ல வேண்டும். பக்தர்கள் ரயில்வே தண்டவாளங்கள் , சாலைகளின் நடுவே அபாயகரமான இடங்களில் நடந்து செல்வதை தவிர்த்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஓய்வெடுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் சாலை ஓரமாக பாதுகாப்பான இடங்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி இருக்கும் தங்கும் இடங்களில் தங்கி ஓய்வெடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட நிர்வாககங்களும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் குடிநீர், உணவு ,மருத்துவ வசதி, சுகாதார வசதி, கழிவறை வசதி செய்து தரவும்,
அதேபோல வேளாங்கண்ணி திருவிழாவிற்காக பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர், அரசுத்துறையினர், மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பெண் பணியாளர்கள் அனைவருக்கும் குடிநீர், கழிவறை, ஓய்வறை வசதி செய்து தரவும் கேட்டுக்கொள்கிறோம் என்று போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர் (ஏஐடியூசி) சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.