தமிழக அரசு அண்மையில் அமல்படுத்தியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முழுமை யாக வரவேற்கிறேன் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வியாழக்கிழமை வந்தார். இங்கு தரிசனம் செய்த பிறகு ஸ்ரீ தெட்சணாமூர்த்தி கோயில், பட்டினத்தார் கோயில் உள்ளிட்டவைகளுக்குச் சென்று ஆளுநர் வழிபட்டார்.
அப்போது டாக்டர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியது,
எரிவாயு உருளைக்கு தலா ரூ.200 வீதம் மத்திய அரசு விலைக் குறைப்பு செய்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு மேலும் ரூ.300 விலைக்குறைப்பு செய்துள்ளதன் மூலம் புதுச்சேரியில் உருளை ஒன்றுக்கு ரூ. 500 விலைக் குறைப்பு செய்யப் பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தப்படி எரிவாயு உருளை விலையைக் குறைக்க வேண்டும் தமிழக அரசைக் என கேட்டுக் கொள்கிறேன்.
சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்து வரும் பிரக்யானந்தா-வை 2018-ம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். எளிய குடும்ப பின்னணி வந்த பிரக்யானந்தாவின் சாதனைக்கு அவரது பெற்றோர் குறிப்பாக அவரது தயார் ஊக்கியாகச் செயல்பட்டுள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் பிரக்யானந்தாவிற்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும்.
காலை உணவுத் திட்டத்திற்கு வரவேற்பு: தமிழக அரசு அண்மையில் தொடங்கியுள்ள அரசு பள்ளி மாணவர் களுக்கான காலை உணவுத் திட்டத்தை முழுமையாக வரவேற்கிறேன். குழந்தைகளுக்கு உணவை யார் வழங்கினாலும் அவர்களைப் பாராட்டுவதில் தவறில்லை.
இதனால் குழந்தைகளிடையே இருந்து வரும் ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு ஊட்டச் சத்து குறைபாடுகள் நீங்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலையும், மதியமும் ஊட்டச் சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழக அரசு அதில் உள்ள இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டுக்கு உரியது. மேலும் இதனைப் பரிந்துரைத்து மத்திய அரசையும் பாராட்ட முன்வர வேண்டும் என்றார் தமிழிசை. ஆளுநரின் வருகையையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.