“மனித நேய ஓவியர் ” ஓவியர் மாருதியின் பெயரில் ஆண்டுதோறும் “விருது” வழங்க வேண்டும், அவருடைய ஓவியங்களை “நாட்டுடைமையாக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், புதுக்கோட்டை மாவட்ட ஓவியக் கலைஞர்களும் இணைந்து நடத்திய, மறைந்த, புதுக்கோட்டையில் பிறந்த புகழ்பெற்ற ஓவியர் மாருதியின் திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சியும், புகழஞ்சலி கூட்டமும் புதுக்கோட்டை சார்லஸ் நகர், தாஜ் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஓவியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
ஓவியர் மாருதியின் திருவுருவப்படத்தை மருத்துவர் ச. ராம்தாஸ் திறந்துவைத்தார் .சித்ரகலா ரவி நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினார்.
தமிழ்ச் செம்மல், கவிஞர் தங்கம்மூர்த்தி, வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், கும்பகோணம் ஓவியர் இராம.அமுதலிங்கம், ரோட்டரி 3000த்தின் துணை ஆளுனர் எஸ்.கதிரேசன், ரோட்டரி பன்னாட்டு சேவைத் தலைவர் சே.வில்சன் ஆனந்த், கலைமுரசு ஆசிரியர் கே.டி.கந்தசாமி, கவிஞர் சுரேஷ் ஆர்யா, ஓவியர் புகழேந்தி, ஓவியர் ஆனந்த் ஜி.கே.வர்மா, ஓவியர் புவனேஸ்வரி மற்றும் ஓவியர் விஜய லட்சுமி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ரெங்கநாதன் என்ற மாருதி, ஓவியர் ஆக வேண்டும் என்ற வேட்கையில் கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு, சென்னை சென்று மாதவன், நடராஜன் இவர்களை முன்னோடியாகக் கொண்டு ஓவியர் ஆனவர்.
சென்னையில் குடிசையில் வாழ்க்கையைத் தொடங்கி ஒவிய உலகில் உச்சம் தொட்டவர். தலைக்கனம் இல்லாதவர். அதேநேரத்தில் தலையில் கனத்தை வைத்துக்கொள்ளக் கூடாது என்று அனைவரிடமும் சொல்வாராம்.
1959 ஆம் ஆண்டு ஏப்ரலில் குமுதம் பத்திரிக்கையில் “அய்யோ பாவம்” என்ற கதைக்கு ஓவியம் வரையத் தொடங்கி 64 ஆண்டுகள் தொடர்ந்து ஓவியத்துறையில் இயங்கியவர். ஏறத்தாழ 3 லட்சம் ஓவியங்கள் வரைந்தவர்.
குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன வார இதழ்களின் அட்டையை இவருடைய ஓவியங்கள் அலங்கரித்துள்ளன. அவருடைய ஓவியங்கள் ஒரே மாதிரியாவையல்ல ஒன்றுக் கொன்று வேறுபாடுடையது. கண்மணி என்ற மாத இதழுக்கு 27 ஆண்டுகள் தொடர்ச்சியாக அட்டைப்பட ஓவியம் வரைந்துள்ளார்.
“எல்லோருமே நமக்கு வேண்டியவர்கள். எளிய மனிதர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம்” என்ற பரந்த மனப்பான்மை உடையவர் ஓவியர் மாருதி. தன்னுடைய ஓவியங்கள் “எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்” என்று விரும்பும் அவர், பலர் வாழ்வில் முன்னேற வழிகாட்டியிருக்கிறார்.
இளம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார். சமகால படைப்பாளர்களான ஜெயராஜ் , ராமு, மணியன் செல்வன் போன்றவர்களின் ஓவியங்களை பாராட்டியதோடு, தான் சந்தித்து ஆசீர்வாதம் பெற விரும்பிய சில்பியை பேருந்தில் பார்த்தபோது பேருந்திலேயே காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற அதிசயத்தையும் நிகழ்த்தியவர்.
நிகழ்வில், கவிஞர் தங்கம்மூர்த்தி பேசுகையில், புதுக்கோட்டை மண்ணில் பிறந்து சிகரம் தொட்ட உன்னத மனிதரான ஓவியர் மாருதி பெயரில் விருது ஒன்றை தமிழக அரசு, 5 லட்ச ரூபாய் பணமுடிப்போடு வழங்க வேண்டும், அவருடைய ஓவியங்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக அரசிடம் கொண்டு செல்லவேண்டும்.
அதேபோன்று அவருடைய பிறந்தநாளில் நல்ல ஒவியர்களை உருவாக்கும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஓவியத்துறையில் வளர்ந்துவரும் மோ.விக்னேஷ் நிகழ்வில் ஓவியர் மாருதியின் “ஓவியச்சுடர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும் மாருதியின் பிறந்த தினத்தை ஒட்டி நடைபெற்ற ஒவியப்போட்டியில் வெற்றிபெற்றவர் களுக்கு பரிசும் சான்றிதழும், பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிறைவாக ஓவியர் பாண்டியன் நிகழ்விற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் பெர்லின் தாமஸ், ஓவியர்கள் பாலமுருகன், தனபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.