Close
செப்டம்பர் 20, 2024 6:30 காலை

கிரீன் டீ என்கிற பச்சை தேயிலை: எங்கள் தோட்டத்தில்..

அயலகத்தமிழர்கள்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

கிரீன் டீ என்கிற பச்சை தேயிலை – எங்கள் தோட்டத்தில் வளர்வது மகிழ்ச்சி. குளிர்காலம் வரும் வரை இந்த செடி செழிப்பாக வளரும். பறித்து குடித்தது போககாயவைத்து சேமித்து வைத்துக் கொள்கிறோம் எதிர்கால தேவைக்காக. வாருங்கள் ஒரு கோப்பை பச்சை தேயிலை பானத்தை பருகியபடி, அதன் மகத்துவத்தை சுவைக்கலாம்.

கிரீன் டீ.., உலகம் முழுவதும் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது, தண்ணீரைத் தவிர்த்து, உலகில் அதிகம்உட்கொள் ளப்படும் பானம் இது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. சுமார் 4000 ஆண்டுகள் பழமையான பச்சை தேயிலை சீனாவில் தான், முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. சமீபகாலமாக இந்த பானம் குறித்த பார்வையில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் இதன் நுகர்வு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிரீன் டீ சார்ந்த எழுச்சி அதன் விளைவாக உருவான அலை,உத்திரவாதமான ஒன்றா அல்லது வெறும் மோகமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

கிரீன் டீ சார்ந்த ஆரோக்கியக் கூற்றுகளை நாம் தொடர்ச்சியாக கேள்விப்பட்டுகொண்டிருக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும்,சோர்வை எதிர்த்து போராடவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அறிவாற்றல் குறைவை தடுக்கவும் பல கூறுகள் க்ரீன் டீயில் உள்ளது என்றுபல அறிக்கைகள், தகவல்களை தந்த வண்ணமிருக்கின்றன.

இவையெல்லாவற்றுக்கும் நேரடி தொடர்பை கண்டுபிடிப்பது கடினம். இந்த கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா? நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் தினமும் கிரீன் டீ குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா? என்கிற ஆர்வம் தொனித்த கேள்விகள் எழத்தான் செய்கிறது.

ஆரோக்கியமான உணவு திட்டம் என கட்டம் ஒன்றை வரையும் போது, நம் அன்றாட உணவு உட்கொள்ளல் முறையில், சில சிறந்த உணவு வகைகளை மாற்றியமைக்க முயல்வோம்.

புது வகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுத்த புரதம் மற்றும் மாவு சர்க்கரை என அனைத்தையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள நினைப் போம். கூடவே குடிக்க எந்த மாதிரியான பானங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் மனதிற்குள் மணி அடிக்கும். நம் தட்டில் உள்ள மற்ற பண்டங்களை போலவே நம் உணவின் போது நாம் என்ன குடிக்கிறோம் என்பதை தீர்மானிப்பது அவசியம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

எனவே, நம் கோப்பையில் எந்த பானங்களை நிரப்ப வேண்டும், எந்த பானங்களை தவிர்க்க வேண்டும் என்கிற புரிதலும் தெளிவும் அவசியமாகிறது.

பிளாக் டீ வருகிற அதே தாவரத்தின் இலைகளிலிருந்து தான் கிரீன் டீ தேயிலையும் வருகிறது. அப்படி என்ன விஷேசம் இந்த பச்சை தேயிலையில்!!

கிரீன் டீயின் இலைகளை பச்சையாக வைத்திருக்கவும், ஆக்சிஜனேற்ற நிகழ்வை நிறுத்தவும் தேவைக்கேற்ப மிதமான அளவில் சூடுபடுத்தப்படுகிறது. அதேவேளையில் பிளாக் டீ இலைகள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாற முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படுகிறது.

கிரீன் டீ இலைகள் அறுவடை செய்யப்பட்டு உடனடியாக உலர்த்தப்பட்டு, ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படாததாலும், குறைவான பதப்படுத்தலுக்கு உட்படுவதாலும், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் அதாவது உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் பண்புகளைக் கொண்டதாலும், குறைவான காஃபின் கொண்டதாலும் …, இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட கிரீன் டீ, தேயிலைகளில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. காஃபியுடன் ஒப்பிடும்போது பிளாக் டீயில் பாதி அளவு காஃபின் இருந்தாலும், பிளாக் டீயில் உள்ளதில், பாதி காஃபின் தான் கிரீன் டீயில் உள்ளது.

உதாரணமாக, கிரீன் டீ பற்றி கூறப்படும் பொதுவான கூற்று என்னவென்றால், அது உடல் எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்பதாகும். அந்த இரு காரணத் திற்காக தான் நம்மில் ஆகபெரும்பான்மை யானவர்கள் அதன் சுவை பிடிக்கிறதோ இல்லையோ மல்லுக்கட்டிக் கொண்டு மொடக் மொடக்குன்னு குடித்துக் கொண்டிருக்கிறோம். பச்சை தேயிலை நுகர்வதால் ஏற்படுகிற எடை இழப்பு தொடர்பான ஆய்வுகள் கண்டறியப்பட்டதாக காட்டினாலும், அது குறித்த தரவுகள் தெளிவாக இல்லை என்பது தான் உண்மை.

சுருக்கமாக சொல்வதென்றால்..நிரூபிக்கப்படாத பல நன்மைகள் இந்த பானத்தில் இருக்கிறதோ இல்லையோ, கிரீன் டீ ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சில குறிப்பிடத்தக்க ஆரோக்கியம் குறித்த நன்மைகளின் அடிப்படையில், கிரீன் டீ மோகம் நல்ல காரணத்துடன் தான் நம்மிடையே பரப்ப பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

நம் வழக்கத்தின் வழக்கமான பகுதியாக இருக்கிற ஒன்றை மாற்றுவது என்பது கடினமான ஒன்று. இருப்பினும் சின்ன சின்ன நேர்மறையான மாற்றங்கள், குறிப்பிடத்தக்க நல்ல முடிவுகளைத் தரக்கூடும்.

கிரீன் டீ சுவை பிடித்திருக்கும் எனில், நாளும் பருகுவதில் தவறில்லை. நம் ஆரோக்கியமான உணவு பட்டியலில் பச்சை தேயிலை பானத்தை, கலோரி நிறைந்த மற்ற பானத்திற்கு மாற்றாக மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்பேன்.

# இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top