Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

காலி மது பாட்டில்களை அவுட்சோர்சிங் முறையில் திரும்பப் பெற டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை

தமிழ்நாடு

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் காலி மதுபாட்டில்களை வாங்கும் திட்டத்தை அரசு மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந் நிலையில், அதனை பரிசீலிக்க உயர்மட்டக்குழு அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் மதுக்கடைகளில் சுமார் 1,200 பார்கள் இயங்கி வருகின்றன. மதுப்பிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிச் செல்வதைத் தடுக்கவும், விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைத்து போடுவதைத் தடுக்கும் வகையில் டெட்ரா பாக்கெட்டில் மதுவிற்பனையை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இதனிடையே டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப் பெரும் வகையில் மதுப்பிரியர்கள் வாங்கிச் செல்லும் ஒவ்வொரு மதுபாட்டிலிலும் ஸ்டிக்கர் ஒட்டி பாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக டாஸ்மாக் கடைகளில் பிடித்தம் செய்து கொள்ளும் பை- பேக் முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்யும் முறை நீலகிரி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பை-பேக் முறையில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் மீண்டும் பாட்டிலை கொடுத்து விட்டு ரூ.10ஐ திரும்ப பெற்று கொள்கிறார்கள். சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பை-பேக் முறையை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பை-பேக் முறையை அமல்படுத்துவதற்கு பதிலாக மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியை அவுட் சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம் என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்மணி டாட் நியூஸ் இணையதள  செய்தியாளரிடம் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.பெரியசாமி   கூறியது:

“பை- பேக் முறையை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 1,200 பார்கள் மட்டுமே இயங்குகின்றன.

பல இடங்களில் விற்பனைக்கு வரும் மதுபாட்டில்களை இருப்பு வைக்க கடையில் போதிய இடம் இல்லை. ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் ஒரு மேற்பார்வையாளர், 2 விற்பனை யாளர்களுடன் இயங்குகின்றன.

இவர்கள் மது விற்பனையில் கவனம் செலுத்துவதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். எனவே, காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணியை அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றார்.

ஈரோடு மாவட்ட எல்.பி.எஃப். மாவட்ட கவுன்சில் செயலரும், டாஸ்மாக் எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலருமான கோபால் கூறுகையில், பை-பேக் முறையில் ஒவ்வொரு பாட்டிலிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொண்டு அதை பதிவேட்டில் பதிவு செய்வதுடன், அந்த பாட்டிலை திரும்பப் பெறும் போது கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டிய பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட கட்டாயம் உள்ளது.

ஏற்கெனவே மதுபாட்டில்களை கொண்டு வரும் அட்டைப் பெட்டிகளை இருப்பு வைக்கவே இடப்பற்றாக்குறை உள்ளது. காலி மதுபாட்டில்களை இருப்பு வைக்க இடம் போதாது. பார் இல்லாத இடத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற முடியாது.

மேலும், வெளியூர் செல்பவர்கள் மதுபாட்டிலை கொண்டு வந்து ரூ.10ஐ திரும்பப் பெற்றுச் செல்வது சாத்தியமில்லை. இதுபோன்ற பிரச்னைகளால் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் வசம் வழங்குவதே மற்ற பணிகளை பாதிக்காமல் இருக்கும் என்றார் அவர்.

இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரத்திலுள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் காலி பாட்டில்களை அப்புறப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பை-பேக் முறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் மாநில நிர்வாகிகளுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் தலைமையில் சென்னையில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மதுபாட்டில்களை திரும்பப் பெறும் போது அவற்றை இருப்பு வைப்பதிலும், கையாளுவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தற்போது, சேமிப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 432 மதுக்கடைகளில் மட்டுமே பை-பேக் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.மதுக்கடைகளில் போதிய இடம் இல்லாததால் திரும்பப் பெறும் காலி பாட்டில்களை இருப்பு வைப்பதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

எனவே, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதே இப்பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என்று கருத்து தெரிவித் துள்ளனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ள ஆலோசனை தொடர்பாக மாநில அரசுடன் கலந்துரையாடிய பின், அவுட்சோர்சிங் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்.

#செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top