மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் , மாநகராட்சிகள், நகராட்சிகள் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள், நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.டி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளாக சீர்மிகு நகரத் திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் இடங்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக தெப்பக்குளம் – ஐராவதநல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் இறுதி கட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர்கள் கே.ஜே.பிரவீன்குமார், சிவகிருஷ்ணமூர்த்தி (திருநெல்வேலி), ஆனந்தமோகன் (நாகர்கோவில்), தினேஷ்குமார் (தூத்துக்குடி), நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர்ரகுமான் (மதுரை) விஜயலெட்சுமி (திருநெல்வேலி), மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு, திருநெல்வேலி மாநகரப் பொறியாளர் லெட்சுமணன்,
துணை ஆணையாளர்கள் சரவணன், இதயநிதி, நகர்நல அலுவலர், மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி இயக்குநர் பேருராட்சிகள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.