மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது .
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால், கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சந்நிதி வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.சீரமைப்பு பணிகளை முடிந்தவுடன் கும்பாபிஷேக பணிகளை தொடங்க வேண்டும்.
இதன் காரணமாக ரூ.25 கோடி மதிப்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்பட்டு பின்னர் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக (செப் 4) பாலாலய பூஜை நடைபெற்றது. இதற்காக சுவாமி சந்நிதி, 2ஆம் பிரகாரம், நவக்கிரக சந்நிதி அருகில் யாக சாலைகள் அமைக்கப் பட்டு நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் பூஜையும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை காலை 7 மணி முதல் 9 மணி வரையில் 2ஆம் கால பூஜைகள் நடைபெற்று நவகிரக சந்நிதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டம் அமைக்கப்பட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து புனித நீர் கலசங்கள் 2-ஆம் பிரகாரம் வலம் வந்து உற்சவர் சாமி சந்நிதியில் கோலால பூஜைகள் நடைபெற்று பின்னர் அங்கு மாம்பலகையில் கோபுரங்களை வரைந்து வைத்து அதற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றி பாலாலயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்துவித மராமத்து பணிகளும் தொடங்கவுள்ளன.