ஈரோடு புத்தகத் திருவிழாவை பல ஆண்டுகளாக தலைமை தாங்கி சிறப்பாக நடத்தி வருபவர் ஸ்டாலின் குணசேகரன். இவரின் முந்தைய “விடுதலை வேள்வியில் தமிழகம் “, இந்திய விடுதலைப்போரில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பை சிறப்பாகச் சொல்லும் ஒரு சிறந்த தொகுப்பு.
அதே போன்று, மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் நூல் வடிவம்தான் “தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்” .’ஜீவா முழக்கம்’ இதழின் இந்திய சுதந்திரப் பொன்விழா மலரில் இடம்பெற்ற 36 தியாகச் சுடர்களைப் பற்றிய கட்டுரைகள் இவை.
பகத்சிங், நேதாஜியைத் தவிர மற்றவர்கள் யாவரும் தமிழ் மண்ணில் உதித்தவர்கள். பூலித்தேவன்,மருத நாயகம், தில்லையாடி வள்ளியம்மை, தீரன் சின்னமலை, மருதபாண்டியர், செண்பகராமன், வீரவாஞ்சி, கே. பி. சுந்தரம்பாள், மீனா கிருஷ்ணசாமி என்று பலரின் தியாகங்கள் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது கட்டுரைகளில்.
“கட்டுரைகளில் பூலித்தேவன், மருதநாயகம், தில்லையாடி வள்ளியம்மை, செண்பகராமன்…. போன்றோரின் தியாகச் செயல்களைப் படிக்கும் போது நெஞ்சு கணக்கிறது. முடிந்தபின் வளைந்த முதுகும் நிமிர்கிறது.
நமக்காகப் போராடிய வீரத் தியாகிகளின் அரிய ஆற்றலை, தன்னலமற்ற சேவையை இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் ” என்று தா.பாண்டியன் நூலின் அணிந்துரையில் குறிப்பிடுகிறார். வெளியீடு: குமரன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, சென்னை 600 017.
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை #