“காங்கிரஸ் மகாசபைக்கு பிதா போன்றவர் ஹுயூம் என்பது பலரின் கருத்து. உண்மையில் மகாசபை தோன்றிய வகையில் அவர் காரணபூதரே.
இடைவிடாமல் 25 ஆண்டுகாலம் அதன் பொதுக் காரியதரிசி யாகவும் (செயலாளர்) இருந்தவர்; இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மகாசபைக்காக உழைத்தவர். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் சரித்திர உண்மை ஒன்றை உரைத்தல் அவசியம்.
ஆட்சி முறையின் அவலம், அதிகாரிகளில் சிலருடைய போக்கு ,அரசாளும் இனத்தார் சிலரின் ஆணவம், இவை காரணமாக மக்களுக்கு கொதிப்பும் மிகுதி. கொதிப்பு கலகமாக மாறுமோ என்ற பீதி. அதனை வேறு வழியில் திருப்புவதே ஆதியில் ஹீயுமின் கருத்து.
ஜனசாரத்திருத்த சபையாக (மக்களைச் சீர்திருத்தம் செய்யும்) காங்கிரஸை ஆக்கவே அவர் விரும்பினார். அப்போது ராஜப்பிரதிநிதியாக இருந்த டப்ரினுடன் கலந்து பேசினார். மகாசபை ராஜியச் சபையாக (அரசியல் கட்சி) இருக்க வேண்டும் என்பதே டப்ரின் யோசனை. அதன் பின்பே ஹியூமின் கருத்து மாறியது.”பக்கம்.17-18.
உலகில் தோன்றிய, இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் கட்சிகளில் இந்திய தேசிய காங்கிரஸும் ஒன்று (அமெக்க ஐக்கிய நாடுகளின் ஜனநாயக் கட்சி 1828, குடியரசுக் கட்சி – 1854; இங்கிலாந்தின் கன்ஸர் வேட்டிக் கட்சி 1834,தொழிலாளர் கட்சி 1900 தொடங்கப்பட்டது.)
இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது டிசம்பர் 28, 1885 -ல். முதல் கூட்டம் நடைபெற்றது பம்பாயில். கலந்துகொண்ட பிரமுகர்கள் 73 பேர்.அவர்களில் சென்னை பிரதிநிதிகள் 20 பேர். முதல் தலைவர் வங்காளத்தைச் சேர்ந்த உமேச சந்திர பேனர்சி. 9 தீர்மானங்கள் நிறைவேறின.
முதல் காங்கிரஸில் முதல் தீர்மானத்தில் முதன்முதலில் பேசியவர், The Hindu பத்திரிக்கையைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர். இப்படிப் பல்வேறு அரிய தகவல்களை சொல்லும் புத்தகம்தான்,”காங்கிரஸ் சரித்திரம்-1885 -1935
அல்லது சுதந்திரப் போர் விவரம்.”
இந்த நூல் 1935 ல் காங்கிரஸின் பொன்விழாக் கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. தற்போது 2016 -ல் சந்தியா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார் எம்.எஸ்.சு. ஆங்கிலேயர் ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் தோற்றம் , கட்சியில் தோன்றிய பிளவுகள், 1934 வரை நடைபெற்ற மாநாடுகள், கட்சிக்குள் நிலவிய கருத்து மோதல்கள், சுதந்திர உணர்வை ஊட்டியதில் அதன் சாதனைகள், உப்புச்சத்தியாக்கிரகம் – என்று இந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து தகவல்களையும் இந்த நூலில் 19 தலைப்புகளில் ஆவணமாக்கப்பட்டுள்ளது.
சந்தியா பதிப்பகம்,044-24896979.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#