Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம்: நடிகை ராதிகா பெருமிதம்

ஈரோடு

ஈரோடு வைஷாலி சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தை , மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.

தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருவது மகிழ்வை தருவதாக  நடிகை ராதிகா தெரிவித்தார்.

ஈரோடு பெருந்துறை சாலையில் கே.பி.கே. பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைஷாலி சில்க்ஸ் ஜவுளி ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய ஷோரூமை திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

புதிய ஷோரூமை நடிகை ராதிகா சரத்குமார் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நான் ஈரோட்டுக்கு பலமுறை வந்து சென்றிருக்கிறேன். தற்போது ஈரோட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை காண்கி றேன்.40 ஆண்டுகால திரை உலக வாழ்வில் சாதித்தது என்ன என்று கேட்கிறீர்கள். 40 ஆண்டுகளாக திரை துறையில் இருப்பதே ஒரு சாதனை தானே.

திரைத்துறைக்கும் தொலைக்காட்சி துறைக்கும் என்ன வித்தியாசம் என்றால் இரண்டுக்குமே ஒரே மாதிரியான உழைப்பைத்தான் கொடுக்கிறோம். அதனால் திரைத் துறைக்கும், தொலைக்காட்சி துறைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை.

ஈரோடு போன்ற நகரங்களில் வைஷாலி சில்க்ஸ் போன்ற பொட்டிக் ஜவுளி விற்பனை ஷோரூமை ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. குறிப்பாக இந்த ஷோரூமின் பெண் தொழில் முனைவோரான கிருத்திகா போன்றவர்களின் முயற்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

பொதுவாகவே நான் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள் அடுத்தகட்ட முன்னேற் றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று விரும்புவேன். அந்த வகையில் கிருத்திகா போன்ற பெண் தொழில் முனைவோர்கள் சொந்த தொழில் தொடங்கி முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு விருது வழங்காதது பற்றி பலரும் கருத்து கூறி விட்டார்கள். ஜெய் பீம் திரைப் படத்தைப் பொறுத்தவரையிலும் மத்திய அரசின் விருதுகள் பெறுவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கிறது என்பதே என் கருத்து.

அந்த திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் உள்ளிட்ட பலரின் நடிப்பு அபாரமானது. துரதிஷ்டவசமாக மணிகண்டனின் நடிப்புக்கு விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கக் கூடிய தாகும்.

நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசனுக்கே மத்திய அரசு விருதுகளை வழங்கி கௌரவிக்காமல் போனது அனைவரும் அறிந்தது தான். நடிகர் சிவாஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது முன்பே வழங்கி இருக்க வேண்டும். மத்திய அரசு விருதுகளை வழங்கா விட்டாலும் மக்களின் ஆதரவு ஜெய் பீம் படத்துக்கு பெரிதும் இருந்தது. ஜெய் பீம் படம் மக்களின் மனதை கொள்ளை அடித்தது.

முன்பு குறிப்பிட்ட கட்சிக்கு (திமுகவுக்கு) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். கடந்த சில காலமாக அரசியலில் நான் ஆர்வம் செலுத்தவில்லை.எதிர்காலத்தில் நான் அரசியலில் ஈடுபடுவேனா என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கான நேரமும் காலமும் வரும்போது அதை பற்றி பேசலாம்.

திரையில் எந்த நடிகருக்கு அம்மாவாக நடிக்க விரும்புகிறேன் என்று கேட்டால் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இதுவரை நான் அம்மா கேரக்டரில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நான் Comfort ஆகவே இருந்திருக்கிறேன்.

ஈரோடு
புதிய ஷோரூமில் ஜவுளி ரகங்களை பார்வையிட்ட நடிகை ராதிகா

வட இந்திய தென்னிந்திய திரைப்படங்களுக்கு என்ன வித்தியாசம் என்று கேட்டால் அண்மைக்காலமாக தென்னிந்திய திரைப்படங்களுக்கு பான்-இந்திய திரைப்படங்களாக மட்டுமின்றி உலக அளவிலும் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. தென்னிந்திய மொழி திரைப்படங்கள் பலவும் இந்தியா முழுவதும் கோலோச்சி வருவது நல்ல விஷயமாகப்படுகிறது.

நான் நடித்த சந்திரமுகி-2 திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இது தவிர விஜய் டிவியில் கிழக்கு வாசல், கலைஞர் டிவியில் பொன்னி, தாயம்மா மற்றும் ஜி டிவியில் வசந்தபாலன் இயக்கத்தில் தலைமைச் செயலகம் ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் ராதிகா.

முன்னதாக, மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நிர்மலா சதாசிவம், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

விழாவில் பங்கேற்றவர்களை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மேனேஜிங் டிரஸ்ட் மற்றும் அறம் சாரிடி டிரஸ்ட் செயல் இயக்குநர் கிருத்திகா சிவகுமார் வரவேற்றார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள வைஷாலி சில்க்ஸில் முன்னணி பிராண்டட் நிறுவனங்களின் காட்டன் சில்க்ஸ் புடவைகள், அனைத்து ரக பட்டுப் புடவைகள், சுடிதார்கள், குர்தீஸ் என பல்வேறு வகையான ஆடைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top