Close
நவம்பர் 22, 2024 2:17 மணி

தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது தற்போது வடமாநிலங்களில் பேசுபொருளாகி வருகிறது: திமுக எம்பி அப்துல்லா

தமிழ்நாடு

திமுக எம்பி அப்துல்லா

தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது தற்போது வடமாநிலங்களில் பேசுபொருளாகி வருகிறது என்றார் மாநிலங்களவை திமுக எம்பி  அப்துல்லா.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்  மேலும் அவர் கூறியதாவது:
இப்போது எந்தப் புதிய குழப்பத்தையும் ஏற்படுத்த நாங்கள் முற்படவில்லை, சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்திருத்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக இந்த மண்ணில் பேசிக் கொண்டிருப்பதுதான்.
விமர்சனங்கள்தான் உரையாடலாகும், உரையாடல்தான் நல்ல சிந்தனையைத் தரும். அந்த வகையில் வடமாநிலங்களில் உதயநிதி  பேசு பொருளைத் தொடக்கி வைத்திருக்கிறார்.
இந்தியா கூட்டணியிலேயே வடமாநிலங்களில் எதிர்ப்பு வந்திருப்பதாகக் கேட்கிறீர்கள். தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது இப்போது வடமாநிலங்களில் உரையாடலாகி வருகிறது. வரட்டுமே.
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப் போவதாக செய்திகள் வருகின்றன. தங்களுக்குப் பிடித்ததை சர்வாதிகாரமாக செய்ய முயற்சிக்கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது இயல்புதான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் கொண்டு வருவதற்கு முன்னால், ஒரே நாடு ஒரே சுடுகாட்டைக் கொண்டு வரட்டும். சாதியப் பாகுபாடில்லாத சமூகத்தை அமைத்துவிட்டு பிறகு பார்க்கலாம்.
புதுக்கோட்டையில் சிந்தெட்டிக் விளையாட்டுத் தளம் அமைப்பதற்காக மத்திய அரசின் நிதி கோரி ஏற்கெனவே கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும்.
அதேநேரத்தில் புதுக்கோட்டை விளையாட்டரங்கம் அமைந் துள்ள பகுதி காட்டுப்புதுக்குளம் என்ற பழைய நீர்நிலைப் பகுதி. பெருமழை வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, பொதுப்பணித் துறையினருடன் பேசி, பாதிப்பில்லாத வாறு விளையாட்டரங்கப் பகுதியை போதுமான அளவுக்கு உயர்த்தி, போதுமான வடிகால் வசதிகளையும் செய்து முடித்த பிறகு, சிந்தெட்டிக் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடகள சங்கம் முறைப்படி அமைத்து, பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப். 14,15,16,17 தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறவுள்ள மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக புதுக்கோட்டை வீரர்களைத் தேர்வு செய்யும் போட்டிகள் வரும் செப். 8,9 தேதிகளில் நடைபெறும் என்றார் அப்துல்லா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top