கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள்
திருவொற்றியூர், செப்.7: கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கலாசா (60) என்ற கட்டத் தொழிலாளியின் தொடையில் குத்திய மூன்றைரை அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை அறுவைச் சிகிச்சை மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறியது:
திருவள்ளூமர் மாவட்டம், பழவேற்காட்டைச் சேர்ந்தவர் கலாசா (60). கட்டடத் தொழிலாளியான கலாசா கண் பார்வை குறைபாடு உள்ளவர். கட்டடத் தொழிலாளியான இவர் வியாழக்கிழமை அதே பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணி ஒன்றில் உதவியாளராக வேலை செய்து கொண்டி ருந்தபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டடம் ஒன்றில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள கம்பி மீது கலாசா விழுந்துள்ளார். இதில் கலாசாவின் ஒரு பகுதியில் குத்திய கம்பி மறுபுறம் வெளியேறியுள்ளது. இதனையடுத்து அலறித் துடித்த கலாசாவை மீட்கும் முயற்சியில் சக தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ரம்பம் மூலம் இரும்புக் கம்பியை அறுத்துவிட்டு தொடையில் குத்திய சுமார் மூன்றரை அடி கம்பியுடன் மீட்கப்பட்ட கலாசா உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு கொண்டு வந்து தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சத்தியபிரியா, அசோகன் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் திருநாராயணன், பவானி, மாலா ஆகியோல் தலைமையில் சிறப்புக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு கலாசாவின் தொடையில் குத்தியுள்ள இரும்புக் கம்பியை அற்றும் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
தொடையில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகாதவகையில் இரும்புக் கம்பியை மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக அகற்றி மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.