Close
செப்டம்பர் 20, 2024 9:30 காலை

திருவொற்றியூர்-மணலி நெடுஞ்சாலை மேம்பாலம் திறக்கப்பட்டதால் முடிவுக்கு வந்தது பொதுமக்களின் அவதி

சென்னை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்த திருவொற்றியூர்-மணலி நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் இந்த வழித்தடத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய வாகனப் போக்குவரத்து.

சென்னை திருவொற்றியூர்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு இந்த வழித்தடத்தில் நேரடி வாகனப் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

இதன்மூலம் பொதுமக்கள் கடந்த 6 ஆண்டுகளாக அனுபவித்து வந்த சிரமங்கள், அவதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வடசென்னையின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலிக்கு இடையே மாநில நெடுஞ்சாலை உள்ளது.   இச்சாலையில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் தரைப்பாலம் ஒன்று இருந்தது.  நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பாலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது மாநகரப் பேருந்து ஒன்று மோதியதில் பேருந்து கால்வாயில் விழுந்து இருவர் உயிரிழந்தனர்.

இதனால் பாலத்தை இடித்துவிட்டு புதிய மேம்பாலம் அமைக்கப்பட  வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில்,  ரூ. 58 கோடி மதிப்பீட்டில் சுமார் 530 மீட்டர் நீளம் கொண்ட புதிய மேம்பாலம் அமைக்க கடந்த செப்.7, 2016-ஆம் ஆண்டு புதிய பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணி உத்தரவை நெடுஞ்சாலைத் துறை வழங்கியது.

பின்னர் ஓராண்டுக்கு பிறகு ஏற்கெனவே இருந்த பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. மேலும் பக்கிங்காம் கால்வாய் கிழக்குக் கரையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு கடந்த  செப். 2017-ல் பாலம் கட்டும் பணி தொடங்கியது.

ஆனாலும் மாற்றுப் பாதையில் செல்லும் போது சுமார் 10 கி.மீ. தூரம் கூடுதலாக வாகனங்கள் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.  மேலும் சுமார் 13 மாதங்களுக்குள் கட்டி முடித்திருக்க வேண்டிய இம்மேம்பாலம் அமைக்கும் பணி சுமார் 6 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் , வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

இப்பிரச்னை குறித்து  பல்வேறு நாளிதழ்கள் மற்றும்  ஊடகங்களில் சிறப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் கட்டுமானப்பணியை உடனே முடிக்கக் கோரி மணலியில் வியாபாரிகள், அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து மேம்பாலம் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை முடுக்கிவிட்டது.  இந்நிலையில் ஒப்பந்தப் பணி உத்தரவு வழங்கப்பட்ட அதே செப்.7-அன்று இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவொற்றியூரிலும் மேம்பாலம் திறக்கப்பட்டது..

இதில், வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி. ஆறுமுகம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் கந்தசாமி, கோட்டப் பொறியாளர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய மேம்பாலத்தில் வாகனப் போக்கு வரத்தைத் தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு திருவொற்றியூர், மணலி இடையே நேரடி வாகனப் போக்குவரத்து தொடங்கியது. மேம்பாலம் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் மணலி கடை வீதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவொற்றியூர் தேரடி, மணலி பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.குப்பன், மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பட்டாசு வெடித்து பேருந்து, ஆட்டோக்களில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இம்மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம்  வடசென்னையை மணலியுடன் இணைக்கும் முக்கிய சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கான்கார், பால்மர் லாக்ரி உள்ளிட்ட கனரக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அனுபவித்து வந்துள்ள சிரமங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மகிழ்ச்சி தெரிவித்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top