சநாதனம் என்றால் என்ன? என்று கல்லூரிப் பேராசிரியை ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விக்குத் தந்த பதிலைச் சுருக்கமாக இங்கே தந்துளேன்.
சநாதனம் யாரையும் கொல்லத் துணியும். சோழப் பேரரசின் பட்டத்து இளவரசனான கரிகாலனையே கொலை செய்த சநாதனத்தைக் குறைத்து மதிப்பிடுவது தவறு.
ஆங்கிலேயக் கல்வியைக் கற்று, ஆங்கிலேயரின் கால்களை வருடியவாறு, ஆங்கிலேய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த உயர் சாதியினரில் பார்ப்பனர்கள் முதன்மை இடம் வகித்தனர்.
அதேவேளையில் ஆயிரமாண்டுகளாக சநாதனம், வருணக் கோட்பாடு என்ற பெயரில் பிறப்பு, பால் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் கற்பித்து, சமூக அடுக்கில் பார்ப்பனர் வகித்திருந்த உச்சநிலை, காலனியாதிக்க ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களினால் மெல்ல ஆட்டங் கண்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய அரசின் திருத்தப்பட்ட சாசனச் சட்டம்(1833) , 87 வது பிரிவின்படி ” இந்தியாவில் வாழும் எந்தவொரு குடிமகனும் அவனது மதம், பிறப்பிடம், வம்சம், வர்ணம் என்னும் எந்தவொரு காரணத்தாலுமோ அன்றி அவையாவற்றானுமோ கம்பெனியில் வேலை மேற்கொள்வதைத் தடுக்கக்கூடாது.” என்று வேலை வாய்ப்பைப் பொதுவாக்கியது.
இந்தச் சட்டம் பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்டசாதியினர் பரம்பரைத் தொழிலை மட்டும் செய்ய வேண்டுமென்ற மனு தருமக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆயிரமாண்டுகளாக மன்னர்களைச் சார்ந்து பிரம்மதேயம் பெற்று, கிராமப்புற நில உற்பத்தியைக் கொள்ளையடித்த துடன், வேதக் கல்வி மூலம் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தி, அதிகாரத்தில் வீற்றிருந்த பார்ப்பனர்களின் உச்சநிலை சிதலமடையத் தொடங்கியது.
இன்னொருபுறம் ஆங்கிலேயர் அமல்படுத்திய பெண்கள் உடன்கட்டை ஏற்றப்படுத்தலைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு போன்ற சமூகச் சீர்திருத்தங்கள், வருணாசிரம முறையை ஒழித்துவிடுமென்று கருதிப் பயந்தனர்.
வருணாசிரம முறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனர்கள்தான் தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் காலனிய அரசியலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆங்கிலேயரைத் துப்பாக்கி புல்லட்கள், வெடிகுண்டுகள் மூலம் விரட்டிட முயன்ற வாஞ்சி அய்யர் போன்ற பார்ப்பனர்கள், ஒருவகையில் சநாதனத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட முயன்றனர்.
ஆஷ் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்தபோது, பட்டியல் இனத்தினருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகச் செயல்பட்டார். குறிப்பாகத் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டதனால் சநாதனிகளான பார்ப்பனர்கள் ஆத்திரமடைந்தனர். ஆஷ் துரையை வாஞ்சிநாதன் அய்யர் சுட்டுக் கொன்றதற்குக் காரணம் ஆஷ் துரையின் சநாதன எதிர்ப்புச் செயல்பாடுகள்தான்.
ஆங்கிலேயரான ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சி அய்யரின் சட்டைப் பையில் இருந்த காகிதத்தில், வருணாசிரமத்தின் வீழ்ச்சியைப் பொறுக்க முடியாமல்தான், ஆங்கிலேயனைக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். கடித வாசகம் முக்கியமானது.
”ஆங்கிலேய மிலேச்சர்கள் நமது பாரதத் திருநாட்டைப் பிடுங்கிக்கொண்டு இந்நாட்டின் சநாதன தர்மத்தை அவர்களுடைய கால்களால் மிதித்து அழித்து வருகின்றனர்… ராமன், கிருஷ்ணன், சிவாஜி, குருகோவிந்தசிங், அர்ஜுனன் முதலானோர் இருந்து தர்மம் தலைதூக்க அரசாட்சி செய்துவந்த நமது தேசத்தில், பசுவின் மாமிசத்தைத் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை(George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள்.. நான் இன்று இந்தச் செயலைச் செய்தேன்.. ”.
இப்படிக்கு
R. வாஞ்சி அய்யர்
ஆதாரம்: Home Dept.(Poll) Procedings
File No. 41-44, PartB August 1911
(National Archives, New Delhi)
இன்றளவும் வேதம் ஓதுதல், ஆகம விதிகள் என்ற பெயரில் பார்ப்பனர் சாதிய அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் துணையாகக் கொண்டிருப்பது சநாதனத்தின் செல்வாக்கு அன்றி வேறு என்ன?
#எழுத்தாளர் முனைவர் ந. முருகேசபாண்டியன்#