படிக்கிற பழக்கத்தை விட கேட்கிற பழக்கமும், பேசுகிற பழக்கமும் அதிகமாக உள்ளது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில், தனது மாநிலங்க ளவை உறுப்பினர் நிதி ரூ.2 கோடியில் புதிய நூலகம் கட்டும் பணியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தொடக்கி வைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் வேண்டும். படிக்கிற பழக்கத்தை விட கேட்கிற பழக்கமும், பேசுகிற பழக்கமும் அதிகமாக உள்ளது. படித்தால்தான் உண்மை எது, பொய் எது என புரிந்துகொள்ள முடியும். கேட்பதை வைத்தோ, பேசுவதை வைத்தோ உறுதிசெய்ய முடியாது.
பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி பிற புத்தகங்களையும் மாணவர்கள் படித்தால் தான் அறிவு வளரும். நூலகங்களில் இளைஞர்கள், மாணவர்களைக் கொண்டு, வாசகர் வட்டத்தை மேம்படுத்த வேண்டும். பெரிய தலைவர்கள், அறிஞர்களின் சுயசரிதையைப் படிக்க வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 2 முறையாவது நூலகத்துக்குச் செல்ல வேண்டும்.
8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தை முழுமையாக படிக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் படிக்க முடியவில்லை என அகில இந்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தப் பின்னடைவு மிகவும் வருத்தத்துக்குரியது. தமிழகம் தர வரிசையில் முதலிடத்தில் இருக்க பள்ளிக் கல்வித் துறை கவனம் செலுத்த வேண்டும்.
நூலகங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டுக்கும் நூலகங்களை அமைப்பதற்காக ரூ.500 கோடி நிதியை யாவது மத்திய அரசு தர வேண்டும் என்றார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ-ராமசுப்புராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.