அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி பெருமிதம் தெரிவித்தார்.
ஈரோடு, பெருந்துறை சாலை, பிச்சாண்டாம்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நந்தா மருத்துவக் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா மற்றும் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் உள்ள என்எம்சிஎச் அகாடமிக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்வி மற்று்ம் ஆராய்ச்சி நிலையத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
முதன்மை விருந்தினராக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று புதிய கட்டடங்களை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.நந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்து பேசுகையில்,
அமைச்சர் சு.முத்துசாமி எந்தப் பணியையும் திட்டமிட்டு, நேர்த்தியாக செய்து முடிப்பதே அவரது உயர்ந்த குணமாகும். மருத்துவ உலகில் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவால் பாதிக்கப் பட்டபோது அதற்கு மருந்து (வேக்ஸின்) கண்டுபிடித்து மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து மீட்க இந்திய மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும் முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.
இங்கு கண்டறியப்பட்ட கொரேனா தடுப்பு மருந்துகள் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பாதிப்பைக் குறைப்பதில் இந்திய மருத்துவர்கள் பெரும் சாதனை புரிந்தனர்.
அந்தக் கொடுமையான தொற்றுப்பரவலில் இருந்து நாம் மீண்டு விட்டாலும் கோபம், பொறாமை, வெறுப்பு மூன்றையும் மனிதன் தவிர்த்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும். இந்த மூன்று வைரஸ் கிருமிகளும் நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் வெல்லும் ஆயுதமாக ஆன்மிகமும், யோகாவும் உள்ளது.
வேகமான வாழ்க்கையும், வேகமான சிந்தனையின் காரணமாக மனக்குழப்பம் (ஸ்ட்ரெஸ்) ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட யோகா நமக்கு பேருதவி புரிகிறது. மருத்துவர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நோயற்ற வாழ்வைத் தர மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த வாழ்வை அளிக்கக்கூடிய மருத்துவக் கல்வியில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் பெரும் சாதனைகளை புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
நந்தா மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டபடிப்புக்கான வகுப்பை அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைத்து பேசியதாவது:
ஈரோட்டில் புதிதாக தொடக்கப்பட்டுள்ள இந்த நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 300 படுக்கைகளுடன் தொடக்கப்பட்டுள்ளது. நந்தா கல்வி அறக்கட்டளையின் 21 -ஆவது கல்வி நிறுவனமாக தொடக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும் தன்னகத்தே கொண்டுள்ளது. 25,000 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட நூலகம், தங்கும் விடுதிகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் அரங்கம் போன்றவை உள்ளன.
இந்த மருத்துவக் கல்வி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சேவையும், மாணவர்களுக்கு தரமான கல்விம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் மக்கள் கடும் துயரங்களை சந்தித்த போது, கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உரிய உதவிகளை செய்து தருமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கட்சியின் தொண்டர்கள், பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச்சென்று ரூ. 5 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கினர்.
இதுபோன்ற மருத்துவக் கல்லூரிகள் அன்றைய காலக்கட்டத்தில் செயல்பட்டிருந்தால், பொதுமக்கள் அதிகமானோர் பயனடைந்திருக்க வாய்ப்பாக இருந்திருக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகம் மருத்துவ சேவையில் மிகச் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் உள்ளிட்ட அரசின் சுகாதார சேவைகளால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர் என்றார் அமைச்சர் முத்துசாமி.
முன்னதாக நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் ஏ.சந்திரபோஸ் வரவேற்றார். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுந்தரவேல் நன்றி கூறினார்.
# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #