Close
நவம்பர் 22, 2024 3:28 மணி

புத்தகம் அறிவோம்… “சகோதர சகோதரிகளே”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

இன்று செப்டம்பர் 11.உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற நாள். அன்பையும், அகிம்சையையும் உலகிற்கு போதித்த நாள். அழிவு, அமைதி இரண்டின் பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டிய நாள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… 

செப்.11, 1609, அமெரிக்க பூர்வீக குடிமக்களின் அழிவிற்கு முன்னோடியாக இருந்த ஹென்றி ஹட்சன் என்ற ஐரோப்பியர், இன்று, மேன்ஹாட்டன் என்று அழைக்கப்படுகிற அமெரிக்க தீவில் காலடி எடுத்து வைத்த நாள்.

செப்.11, 1893 சுவாமி விவேகாநந்தர் அமெரிக்காவின்சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் “அமெரிக்க சகோதரிகளே!, சகோதரர்களே !” என்று ஆரம்பிக்கும் புகழ்பெற்ற உரையை நிகழ்த்திய நாள்.

“பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.. என்று இந்துமதத்தின் பெருமையை அந்த உரையில் குறிப்பிட்டிருப்பார் சுவாமி விவேகாநந்தர்.
செப்.11.1895 “பூமிதான இயக்கத்தை” அன்பின் வெளிப்பாடாக நமக்குத் தந்த வினோபாவின் பிறந்த நாள்.

செப்.11, 1906 மகாத்மா காந்தியின் “சத்தியாக்கிரகம்” பிறந்தநாள். தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில் இருந்த இம்பீரியல் தியேட்டரில் ஆசிய மக்களுக்கு எதிரான பதிவுச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்போகிற அமைதியான போராட்டத்திற்கான வழிமுறையாக “சத்தியாகிரகம்” உருவானது. “சாத்வீக எதிர்ப்பு” என்று தொடங்கப்பட்டு பின்னர் “சத்தியாக்கிரகம்” என்று ஆனது.

செப்.11, 1921, மகாகவி பாரதி அமரரான தினம். செப். 11, 1934, இன்றைய தமிழகத்தின் மூத்த தமிழ்ப் பத்திரிக்கையான “தினமணி” உதயமான நாள்.

செப்.11, 2001, அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக நிறுவனத்தின் இரட்டைக் கோபுரங்கள், தீவிரவாதி களால் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட நாள்.

ராமகிருஷ்ண மடம், இந்த நாளை அமைதியையும் சகோதரத்தையும் வலியுறுத்தும் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. நாமும் சகமனிதனை உள்ளன்போடு நேசிக்கின்ற தினமாக கொண்டாடுவோமே.

விவேகாநந்தரின் உரைகள், எழுத்துகளின் மொத்த தொகுப் பும் ஆங்கிலத்தில் 8 தொகுதிகளாக The Complete work s of Vivekananda என்றும் தமிழில் 11 தொகுதிகளாக அவ்வப்போது வெவ்வேறு தலைப்புகளில் வெளியிடப்படும். “ஞானதீபம்”, (தற்போது ) “விவேகாநந்தரின் வீர மொழிகள் “என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

“சகோதர சகோதரிகளே” என்ற இந்த நூல் மேற்கண்ட 11 – தொகுதிகளின் சாரம். விவேகாநந்தரை வாசிக்க விரும்பு பவர்களுக்கு இது ஒரு தொடக்கம்.

விவேகாநந்தரின் உரைகளும் எழுத்தும் தன்னம்பிக்கை யையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியது. அவருடைய எழுத்துக்களை முழுமையாக வாசித்தால் வேறு தன்னம் பிக்கை நூல்களை வாசிக்கும் அவசியம்  இருக்காது.மதத்தை விட மனிதர்களை நேசிக்க கற்றுத் தந்தவர் அவர். அவரின் எழுத்துகளை வாசிப்போம். சக மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top