Close
நவம்பர் 22, 2024 12:27 மணி

மான ரோஷம் இருந்தால் “இந்தியா” கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்: சீமான் பேட்டி

ஈரோடு

ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்த நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை வந்தேறிகள் என்று இழிவுபடுத்தி பேசியதாக அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது கடந்த 22-2- 2023 -ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராகமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று(11.10.2023)  சீமான் ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து திருமால் நகரில் நடைபெற்ற கட்சியின் கொடியேற்று விழாவில் பங்கேற சீமான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

அருந்ததியர் சமூக மக்களை இழிவாக பேசியதாக என் மீது தொடரப்பட்ட வழக்கின் அழைப்பாணையை ஏற்று இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானேன். இந்த வழக்குதாரர் என்று ஆஜராகாத நிலையில் அக்டோபர் 10 -ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.

அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நான் கருத்து கூறவில்லை. எனக்கு முன்னோர்கள் கூறியதை தான் நான் கூறினேனே தவிர அது என்னுடைய சொந்த கருத்து அல்ல. எனக்கு பிறகு திமுகவின் ஆ.ராசா இதே கருத்தை வலியுறுத்தி கூறியிருந் தார் ஆனால் அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை காரணம் அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதுதான்.

அருந்ததியர்கள் வந்தேறிகள் தான் என்ற வரலாற்றை மாற்றி பேச முடியாது. அவர்களின் வாக்குகளுக்காக என்னால் மாற்றி பேச முடியாது. உண்மையை மட்டுமே பேசியுள்ளேன். நம் முன்னோர்கள் செய்த பிழையை தான் நான் எடுத்து கூறி இருக்கிறேன்.

நான் ஓட்டுக்காக நிற்பவன் அல்ல. நாட்டுக்காக உழைப்பவன்.
சனாதன கோட்பாடு என்பது 3000 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வருவது ஆகும். வர்ணாசிரம கோட்பாடுகளின் அடிப்படையில் தான் சநாதன கொள்கை பின்பற்றப் படுகிறது.

சநாதனம் என்பது மனித குலத்துக்கு எதிரானது. இந்த உலகில் உயர்ந்தவர்கள் யார் என்றால்உழைத்துப் பிழைக்கும் உழவர் குடிகள் மட்டுமே உயர்ந்த குடியாக இருக்க முடியும்.சநாதன கொள்கையை இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி போன்றவர்கள் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் சநாதானத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். திமுகவுக்கு மான ரோஷம் இருந்தால் அவர்கள் இந்தியா  கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்.

திமுக சநாதனத்தை எதிர்க்கிறது. ஆனால் அது உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் சநாதனத்தை ஆதரிக்கிறார்கள். ராகுல் காந்தி இது சம்பந்தமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. உண்மையிலேயே சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் கொண்டிருந்தால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

இன்று ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து விட்டேன் என்று முதலமைச்சர் பெருமிதம் கொள்கிறார். இது சநாதனம் தான். எத்தனை கோயில்களில் அவர் தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்தினார் என்பதை விளக்க வேண்டும். அங்கும் சமஸ்கிருதம் தானே பயன்படுகிறது. இது சநாதனம் அல்லவா. இந்தியா கூட்டணி மூலம் இந்தியாவை காப்பாற்றுவேன் என்கிறார்.

முதல்வர் முதலில் அவர் பிறந்த தமிழகத்தை காப்பாற்றட்டும். காவிரி பிரச்னையில் தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீரை தர முடியாது என்று கர்நாடக காங்கிரஸ், பாஜக கூறுகிறதே. அங்குள்ள மக்களை அக்கட்சிகள் பாதுகாக்கின்றன. ஆனால் இங்கு தமிழர்களை காப்பதாக கூறும் திமுக நீரை பெற்று தரவில்லை.

திமுக முதலில் தமிழகத்தை காக்கட்டும் பின்னர் இந்தியாவை காப்பாற்றலாம். இந்தியா கூட்டணி முரண்பாடு மிகுந்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை எதிர்த்து காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கைகோர்க்கின்றன. கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளும் எதிரிகள்.

ஈரோடு
ஈரோடு நீதிமன்றத்துக்கு வந்த சீமான்

இங்கு மட்டும்தான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக ஒன்றாக உள்ளன. எப்படி கூட்டணி வெற்றி பெற முடியும். உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயிலில் உள்ள செந்தில் பாலாஜி மந்திரியாக தொடர்வதை ஆட்சேபித்துள்ளார். ஆனால் திமுக வாயை திறக்கவில்லை. அவர் வெளியே வந்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று திமுக கருதுகிறது.

சநாதன எதிர்ப்பு சமூக நீதி என பேசுபவர்கள் எந்த அளவு அருந்ததியர்களுக்கு உதவினார்கள். நான்தான் தூய்மை பணியாளர்களின் நலன் குறித்து பலமுறை பேசியுள்ளேன். திமுக கட்சியை சேர்ந்தவர்தான் கோயிலுக்குள் அருந்ததியினர் செல்லக்கூடாது என கோயிலை பூட்டினர்.

திமுக சநாதனத்தை ஒழிக்க என்ன செய்தது என கூற முடியுமா. என் மீது 128 வழக்குகள் உள்ளன. அதில் பெரும்பான்மை திமுக அரசால் போடப்பட்டது.எடப்பாடியார் ஆட்சியில் பத்து வழக்குகள் போடப்பட்டன.

இந்த ஆட்சி முடிவதற்குள் என் மீது உள்ள மொத்த வழக்குகள் 200 ஆகும் என நினைக்கிறேன். சநாதனம் பேசிய மேடையில் சேகர்பாபு இருந்தார் என்பதற்காக அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி என்றால் மோடி, அமித் ஷா போன்றவர்கள் தங்கள் தவறுகளுக்காக பலமுறை பதவி விலகி இருக்க வேண்டும்.

இந்தியாவை பாரத் என்று சொல்வதில் தவறில்லை. ஜி 20 மாநாடு போல பல மாநாடுகள் நடந்தன. இந்த மாநாடுகளால் என்ன பயன் வந்துவிடப் போகிறது. ஏழைகள் வசிக்கும் பகுதியை இப்பொழுது போல காமன்வெல்த் மாநாட்டின் போதும் அமெரிக்க ஜனாதிபதி குஜராத் வந்த போதும் மறைத்தார்கள்.

இம்மானுவேல் சேகரனுக்கு ரூ. 3 கோடியில் மணிமண்டபம் கட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். இந்த அறிவிப்பை எப்போதோ வெளியிட்டு இருக்க வேண்டும் என்றார் சீமான்.

# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top