ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு இரண்டு உயர் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியது. இதற்கு தமிழக அரசும், சினிமாத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள உதயநிதி ஸ்டாலினும் தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி கடந்த 10-ந் தேதி நடந்தது. மறக்குமா நெஞ்சம் என்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் படையெடுத்து திரண்டு வந்தனர். ஆனால், வந்தவர்களுக்கு வேதனையும் வெறுப்பும் தான் மிஞ்சியது.
இயற்கையாகவே ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி நடத்தினால் பெரும் கூட்டம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்த இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கும் போதே அதற்கு எவ்வளவு பேர் வருவார்கள், எவ்வளவு பேர் அமர்வார்கள், எவ்வளவு பேர் நின்று கொண்டு இருப்பார்கள் என்று கணக்கிட்டு அதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், எந்த நடைமுறையும் பின்பற்றாமல், நிபந்தனை ஏதுமின்றி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.தேசிய அளவில் தேசப் பாடல்களுக்கெல்லாம் இசை அமைத்த ஒரு இசை கலைஞனின் தமிழகப் பெருமை பாழ்படுத்தப்பட்டிருக்கிறது. முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனக் காரணம் காட்டி, இரு தமிழக உயர் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கு உண்மையான காரணம் நிகழ்ச்சிக்குச் சென்ற முதலமைச்சர் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் இருந்து அரசு கோட்டைக்குச் செல்ல அரை மணி நேரமே ஆகும். ஆனால் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அன்று கட்சிக்காரர் களின் திருமணத்திற்கு சென்ற முதலமைச்சர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கோட்டைக்கு செல்வதற்கு பதிலாக வீட்டிற்கு ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக சென்றுள்ளார்.
இதில் கடுப்பாகிதான், இன்று இரு உயர் அதிகாரிகளை பலிகடா ஆக்கியுள் ளார்கள். இந்நிகழ்வு அரசு நிர்வாக இயந்திரத்தின் சீர்கேட்டை அம்பலப் படுத்தி உள்ளது. இதற்கு உண்மையிலேயே காரணம் கலைத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு திரைப்படம் எடுப்பதிலிருந்து, வெளியாகும் நாள் வரை, வெளியிடும் தியேட்டர் வரை, எல்லாவற்றையும் தன் கையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே இதே இசைநிகழ்ச்சி மழையால் தடைபட்ட போது திரு ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வருக்கு வைத்தார்.
மக்கள் பிரச்னைக்காக உடனடியாக பதில் சொல்லாத முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி அவர் பெயராலேயே சென்னையில் ஒரு இசை அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
நேற்று முன்தினம் இதே ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டுதல், போலீஸ் பாதுகாப்பு, போதிய வெளிச்சம் இன்மை, வெளியேறும் வசதிகள் என முறையாக எதையும் செய்யபட வில்லை.
கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் தவித்தனர். இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வெளியேறினால் போதும் என்ற முடிவில் வெளியேற முயற்சித்த போது , யாராலும் வெளியே செல்ல முடியவில்லை.
சனாதான தர்மத்தை எதிர்க்கத் தெரிந்த மாண்புமிகு தமிழக முதலமைச் சருக்கும் அவரது மகன் உதயநிதிக்கும் இந்த சாதாரண நடைமுறை கூட தெரியாமல் போனது விந்தைதான். போலி விளம்பரங்களை மட்டுமே மக்களுக்கு வாக்குறுதிகளாக அளித்து ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு துறையிலும் ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்ளும் இந்த அரசின் அவல நிலை கேலிக் கூத்தாக உள்ளது? தமிழக நிர்வாகத்தை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.