“வறுமையிலும் செம்மையாக இருக்க முடியும் என்பதை வாழ்ந்து உணர்த்திய கார்ல் மார்க்சும் ஜென்னியும் ஏன் சின்னக் குறிப்புகளாக வரலாற்றில் சிறுத்துப் போய்விட்டார் கள். கார்ல் மார்க்சோடு வாழ்ந்தபோது நிகழ்ந்த ஒரு நாளின் துயரங்களை ஜென்னி பதிவு செய்திருக்கிறார்.
மேன்மையான லட்சியத்திற்காக வாழ்கிறவர்கள் எப்படியெல்லாம் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது வரலாற்று வாசிப்பின் முக்கிய பகுதி.வரலாறு எழுதப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த வரலாறு அதற்கு பிந்தைய வரலாற்றைக்காட்டிலும் சுவாரஸ்யமானது. “பக்.8.
நம்மில் எத்தனை பேருக்கு நம் கிராமத்தின் வரலாறு தெரியும்.மாவட்டத்தின் மகிமை தெரியும். மாநிலத்தின் பெருமை தெரியும். ஐரோப்பிய நாடுகளின் தலைநகரைத் தலைகீழாகச் சொல்லும் சிறியவர்களுக்கு உள்ளூரில் பிறந்த தலைவர்கள் பற்றித் தெரிவதில்லை.
காஞ்சிபுரத்தில் பிறந்த எத்தனை பேருக்கு உள்ளாட்சி தத்துவத்தை உலகிற்கு வழங்கிய உத்திரமேரூர் கல்வெட்டுகளின் அருமை தெரியும். சேலத்தில் பிறந்த எத்தனை பேருக்கு தாரமங்கலத்தின் சிற்பங்களின் கலைநயங்களும், புதுக்கோட்டையில் பிறந்த எத்தனை பேருக்கு ஆவுடையார் கோயிலின் சிற்ப நுணுக்கங்களும் தெரியும்? நம்மிடம் இருப்பதாலேயே நாம் நம்முடைய பெருமையை அறியாமல் இருந்து விடுகிறோம்.
வரலாற்று உணர்வு நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். உலக வரைபடத்திலிருக்கிற அத்தனை நாடுகளைப் பற்றியும் அக்குவேறாக ஆணிவேறாகக் கூறிவிட்டு நம் சங்க காலத்தைப் பற்றி, கல்லணையைப் பற்றி, காவிரிக்கரை களைப்பற்றி, உலக புராதானச் சின்னங்களாக அறிவிக்கப் பட்ட மாமல்லபுர கடற்கரை கோவிலைப் பற்றித் தெரியாம லிருந்தால் வரலாற்று உணர்வின் வறுமை நமக்கு இருப்பதா கத்தான் பொருள்.” பக்.11
“வரலாறு உணர்த்தும் அறம்” – இறையன்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறையில் 2016 -ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையின் நூல் வடிவம்.சென்னை பச்சையப்பன் கல்லூரியும் அதன் அருகில் இருந்த கன்னிமரா நூலகமும் சாதாரண அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணாவாக மாற்றியது வரலாறு.
வரலாற்றின் அவசியம்,வரலாறு என்றால் என்ன? எப்படி வாசிக்கப்பட வேண்டும்? எப்படி, எதையெல்லாம் எழுத வேண்டும்? எதெல்லாம் வரலாறு? வரலாறை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்று இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் நூலாக, ஆசிரியரே கேள்வி கேட்டு அதற்கான பதிலைத் தருகின்ற வகையில் நூல் வடிவம் உள்ளது.
நாம் வாழும் பகுதியின் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலை மற்றும் அனைத்தையும் முதலில் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்பதை நூல் முழுவதும் சொல்கிறார் இறையன்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப் I நேர்முகத் தேர்வில் உள்ளூர் வரலாறு அதிகம் விவாதிக்கப் படுகிறது.
30 பக்கமே உள்ள இந்த நூலில் உள்ளூர் வரலாறு முதல் உலக வரலாறு வரை அரிய தகவல்களுடன் பேசப்பட்டிருக்கிறது.
அனைவருக்குமான நூல்.
# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #