முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சிகளின் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அமைந்துள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சார்பில்… வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி. அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநில மாணவரணி துணைச்செயலாளர் வீரமணி ஜெயகுமார், விவசாய அணி மாநில இணைச்செயலாளர் குறிஞ்சி சிவகுமார்.
மாநகர் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டலத் தலைவர் பி.கே.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியார் நகர் அக்னி சந்துரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி, பகுதி துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அமுதவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததுடன், பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைகளுக்கும் அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்தார். பின்னர், உதிரிப்பூக்களை எடுத்து வந்த அமைச்சர் முத்துசாமி, அருகில் இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளின் பாதங்களில் மலர்களைத் தூவி மரியாதை செய்து, வழிபட்டுச் சென்றது திமுகவினரை மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தியது.
முன்னதாக பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் சசிகுமார் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
அதிமுக சார்பில்… பன்னீர்செல்வம் பூங்காவில் அண்ணாஉருவச் சிலைக்கு மாநகர் மாவட்டச்செயலர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, அவைத்தலைவர் மீன்ராஜா, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன், கிளைச் செயலாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் த.சண்முகம் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சிற்றரசு, பாலகிருஷ்ணன், காமராஜ், பிரபு, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில்..
மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மயில் துரையன், மாவட்ட பொருளாளர் ராமு, பள்ளிபாளையம் சுப்ரமணியம், சிவா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில்.. மாவட்டச் செயலாளர் எஸ்.என்.தங்கராஜு தலைமையில் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அரசு சார்பில்…
முன்னதாக பெரியாரும், அண்ணாவும் ஒன்றாக வசித்த ஈரோடு பெரியார்- அண்ணா நினைவகத்தில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் நடத்திய குடியரசு நாளிதழின் உதவி ஆசிரியர் களாக முன்னாள் முதல்வர்கள் அண்ணாவும், கருணாநிதியும் பணியாற்றிய போது அவர்கள் தங்கியிருந்த அறையையும், அங்கிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் பார்வையாளர்களுக்கான பதிவேட்டில் தனது கருத்துகளை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பதிவு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷி சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், வட்டாட்சியர் ஜெயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா
# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #