Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும்: கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு

ஈரோட்டில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோடு பெரியார் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.  முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பகுதிச் செயலாளர் பெரியார் நகர் இரா.மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி.செல்வகுமார சின்னையா, ஆவின் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:

இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தி திணிப்பை எதிர்த்து 1965 -இல் சட்டப் பேரவையில் முதல்வராக இருந்த அண்ணாதுரை தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய பிரதமர் நேருவுக்கு அனுப்பி வைத்தார்.

திராவிட இயக்கம் தான் என்றைக்கும் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் இயக்கம் என்பதை உறுதிபடுத்தியவர் அண்ணா. அறிவார்ந்த பேச்சாற்றல் கொண்ட அண்ணா தமிழகத்தில் பிறந்தது நமக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை என்பதை அவரது அமெரிக்க பயணத்தில் அவர் ஆற்றிய முக்கால் மணிநேர உரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1971 -ல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் முதல்வராக இருந்த எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட சத்துணவுத் திட்டம் இன்றும் மக்களால் போற்றப்படும் உன்னதத் திட்டமாக விளங்கி வருகிறது. பிற்காலத்தில் ஜெயலலிதா முதல்வரான போதும், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகும் மக்கள் நலத் திட்டங்களை சீரோடும், சிறப்போடும் செயல்படுத்தினோம்.

ஆனால் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக., மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை அவர்களது செயல்பாடுகளே கூறுகிறது.

அடுத்ததாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியே புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை மக்களின் மனநிலை வெளிப்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த நான்கரை ஆண்டுகள் நடைபெற்ற நல்ல ஆட்சியே அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை ஈட்டித் தரப்போகிறது. மக்கள் விரும்பும், விவசாயிகள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் அதிமுக ஆட்சி விரைவில் அமையப் போகிறது.

அதிமுக ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் எங்கு நோக்கிலும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவ தாக அறிவித்து அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளார்கள்.

இந்தத் தொகை மக்களுக்கு தேவைதான். ஆனால், இந்தத் தொகையை எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கி யிருக்க வேண்டும்.

2 கோடியே 17 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சம் பேர் மட்டுமே தகுதியுள்ளவர்கள் என்று கூறி அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். 2021 தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இன்று விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. ஒருபக்கம் வீட்டுவரி, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதையெல் லாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபோது கடும் வறட்சியும், அதைத்தொடர்ந்து வெள்ளமும் ஏற்பட்டது. பின்னர் கொரானா தொற்று பரவலால் மக்களும், அரசும் கடும் இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தது.

ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து மக்கள் நலத்திட்டங் களை செயல்படுத்தி வெற்றியை கண்டது அதிமுக அரசு. எத்தனையோ சாதனைகளை நடத்தி காட்டியது எடப்பாடி தலைமையிலான ஆட்சி. ஆனால், இன்று எந்தச் சோதனையும் இல்லை. ஆனால் மக்கள் நிம்மதியாக இல்லை. எனவே, அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார் முன்னாள் அமைச்சர் கே..ஏ. செங்கோட்டையன்.

# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top