Close
நவம்பர் 22, 2024 1:05 மணி

ஈரோட்டில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கல்

ஈரோடு

ஈரோட்டில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை
மகளிருக்கு வங்கி அட்டையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஈரோடு, திண்டல் வேளாளர் கல்லூரி கலையரங்கில்  மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசியது:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரப்பெற்றதை தொடர்ந்து, ஒருசில மகளிருக்கு ஓடிபி பாஸ்வேர்ட் (ஒரு முறை கடவுச்சொல்) எண் கேட்டு முகம் தெரியாத மோசடி நபர்களால் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிய வருகிறது.

இத்திட்டம் தொடர்பான பாஸ்வேர்ட் எண்ணை அரசு தரப்பில் இருந்து கோரப்படுவதில்லை. எவரேனும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால், எந்தத் தகவலையும் யாரிடமும் பகிர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் 30 தினங்களுக்குள் மீண்டும் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து உரிமைத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பான சந்தேகங்கள் மற்றும் எந்த அடிப்படையில் அவர்களது கோரிக்கை ஏற்க இயலவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் உதவி மையத்தை நாடி தகவலை பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

விழாவில் வீட்டுவசதி நகர்புற மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி உரிமைத் தொகை பெறும் மகளிருக்கு ரூபே அட்டையை வழங்கி பேசியதாவது:

ஈரோடு

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மகளிருக்கு இலவசமாக பேருந்து பயணம் வழங்கும் திட்டத்தைதான் முதலில் அமல்படுத்தினார். மகளிருக்காக தமிழக அரசால் அளிக்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங் கள் குறித்து தனி புத்தகத்தையே அரசு வெளியிட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பில் படிக்கும் பல பெண்கள் உயர்கல்வியில் சேருவதில்லை என்ற குறையை போக்கு வதற்காக அரசுப்பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும்போது அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். மக்களை கவருவதற்காகவோ, வாக்குகளை பெறுவதற்காகவோ இதுபோன்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவதில்லை.

மகளிர் முன்னேறினால் அந்த குடும்பமே முன்னேறும். குடும்பம் முன்னேறினால் சமுதாயமே முன்னேறும் என்பதை மையமாக வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் அமல்படுத்தி வருகிறார்.நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி யடைகிறோம்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சத்து 38,645 குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை கோரி மனுக்கள் அளித்திருந்தனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது ஆலோசனைகள் வழங்க நினைத்தாலோ மாவட்ட ஆட்சியரி டம் மனுவாக கொடுங்கள். உங்கள் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் அமைச்சர் முத்துசாமி.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷி சந்திரா, மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார், வருவாய் கோட்டாட் சியர் சதீஷ்குமார், தாசில்தார் ஜெயகுமார், மாநில மாணவ ரணி துணைச் செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

# செய்தி-ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top