ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக 9 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள் பவன்குமார், அசோக்குமார், வினய், வால்மீகி, ஜிதேந்தர், சித்தரஞ்சன். இவர்கள் 6 பேரும் பிகாரில் இருந்து ரயில் மூலமாக கேரளத்துக்கு கடந்த 11 -ஆம் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே ரயிலில் வந்த நபர் அவர்கள் 6 பேருக்கும் ஈரோட்டிலேயே நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர்கள் 6 பேரையும் டெம்போ டிராவலரில் அழைத்துச் சென்று தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, அந்த நபரின் கூட்டாளிகளையும் சேர்த்து அந்த 6 பேரையும் சரமாரியாக தாக்கி, அவர்களின் 5 செல்போன்களையும் பறித்து வைத்து கொண்டனர். மேலும் அவர்களது உடமைகளை பரிசோதித்த போது பையில் வைத்திருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
பணத்தை பறிகொடுத்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, வீரப்பன்சத்திரம் போலீஸார் கூறுகையில், வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம், செல்போன் களை பறித்துச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறினர்.