Close
நவம்பர் 24, 2024 10:04 காலை

பருவமழையால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர் கொள்வது தொடர்பாக ஆட்சியர் மெர்சிரம்யா தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது  மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

பின்னர்  ஆட்சியர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக் கூடும். வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன்  ஆலோசனை செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மீட்புப் பணி முகாம்களில் போதிய மருத்துவ முகாம்களுடன் கூடிய பரிசோதனை மேற்கொள்வது, பாதுகாப்பு வசதி, கூடுதல் கழிவறை வசதி மற்றும் இதர வசதிகளை மேற்கொள் ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குளங்கள், ஊருணிகளில் ஏதேனும் உடைப்பு இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து, தேவையான அளவு மணல் மூட்டைகள் சாக்குப்பைகளை இருப்பில் வைத்து நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைக்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் அனைத்து புயல் பாதுகாப்பு இல்லங்கள், பொதுக் கட்டடங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு கட்டடங் களில் தேவையான மின்வசதி, குடிநீர்வசதி மற்றும் மின்னாக்கிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டு மெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினர் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்வதுடன், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும்.

மின்சார வாரியம் சார்பில் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்யவும், சாலையில் விழும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என  ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top