Close
நவம்பர் 22, 2024 12:36 மணி

புத்தகம் அறிவோம்… வேலுநாச்சியாரின் நாவலில் பெண்ணிய சிந்தனைகள்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார் பன்மொழிப் புலமை கொண்டவர். ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர். நிர்வாகத்திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிக் களப்பலியானவர்,

இந்தியாவிலேயே முதல் மன்னர் வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதர்தான். அதேபோன்றே ஆயுதம் ஏந்திப் போராடி களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக் காட்டியவர் இந்தியாவிலேயே முதல் பெண்மணி வேலு நாச்சியார்தான் (வேலு நாச்சியார் நாவலில்).(பக்.29).

“மானாமதுரை போர்க்களத்தில் யானை மீதேரி இடது கையில் வாளும் வலது கையில் வேலுமாக வேலு நாச்சியார் போரில் ஈடுபட்டு எதிரிகளின் படையை நிர்மூலம் ஆக்கியதை எண்ணும்போது, கவிஞர் வைரவன், “ஒரு பெண்ணால் இப்படி யெல்லாம் போர் புரியமுடியுமா? அதுவும் நாற்பது வயதைத் தாண்டி ஒரு பெண்மணியால் இத்தகைய சாதனைகளை நிகழ்த்திக்காட்ட இயலுமா?” என்று எண்ணுவதன் மூலம், பெண் என்பவள் வலிமை குறைந்தவள் போராடும் துணிவு அற்றவள் என்ற ஆணாதிக்க சிந்தனைத் தகர்த்தெறியப் படுவதை உணரமுடிகிறது.”(பக்.116).

“கே.ஜீவபாரதியின் வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்” , என்ற இந்த நூல், ஆசிரியர், கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர் என்ற பன்முகம் கொண்ட மு.கீதாவின், ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம்.

பொதுவாக எழுத்தாளர் எல்லோருமே சமூக செயற்பாட் டாளாராக இருப்பதில்லை. அதில் மு.கீதா விதிவிலக்கில் ஒருவர்.அதேபோல இது போன்ற ஆய்வேடுகளை பலர் நூலாக்க முன் வருவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த வகையில் கீதா இதை நூலாக்காமல் விட்டிருந்தால் நமக்குத்தான் நஷ்டம். ஒரு நல்ல நூல் வாசிப்பை இழந்திருப்போம். இது ஒரு முழுமையான ஆய்வேடு.

இந்த நூலுக்கு அணிந்துரையைத் தந்திருப்பவர் வேலு நாச்சியார் நாவலின் ஆசிரியர் ஜீவபாரதி. “வேலு நாச்சியார் கதைக்கருவும், கதைப்பின்னலும், வேலு நாச்சியார் நாவலின் கதை மாந்தர்களின் பண்புகள், பெண்ணிய வரலாறு, வேலு நாச்சியர் நாவலின் பெண்ணியச் சிந்தனைகள் என்ற மூன்று தலைப்புகளில் நின்றுகொண்டு வேறு நாச்சியாரின் பன்மொழிப் புலமை; வேலு நாச்சியாரின் பெண்ணியச் சிந்தனைகள்; வேலுநாச்சியாரின் பெண்ணியச் சிந்தனைகள்; வேலு நாச்சியாரின் சாதிபேதமற்ற வாழ்க்கைமுறை, வேலு நாச்சியாரின் விடுதலை உணர்வு ஆகிய அனைத்தையும் மிகச் சிறப்பாக ஆசிரியர் கீதா இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அத்துடன் வேலு நாச்சியார் வாழ்ந்த சிவகங்கை சீமை பகுதிக்குச் சென்று கள ஆய்வும் செய்திருப்பது சிறப்பு” என்று புகழ்ந்துரைக்கிறார் ஜீவபாரதி.நாவலை வாசித்திருந்தால் வேலு நாச்சியார் வரலாற்றை மட்டுமே அறிந்து கொண்டிருக்க முடியும்.

இந்த நூலை வாசிக்கும்போது, வேலு நாச்சியாரின் வரலாறு மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்களின் நிலை, பெண்ணியச் சிந்தனைகளின் வரலாறு, பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏற்பட்ட இயக்கங்கள்- பிரம்ம சமாஜம்,ஆரியசமாஜம், ராமகிருஷ்ண மடம்-பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் – காந்தி, பெரியார், பாரதி-என்று கூடுதலாக பல்வேறு செய்திகளையும் அறியமுடிகிறது.மிகச் சிறந்த ஆய்வுநூலைத் தந்த கீதாவிற்கு நம் பாராட்டுகள்.மேன்மை வெளியீடு.044-2847 2058.

#சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top