Close
நவம்பர் 22, 2024 5:30 மணி

திருவொற்றியூரில் ரூ.75 லட்சம் செலவில் மாநகராட்சி பூங்காக்கள் சீரமைப்பு

சென்னை

திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பூங்காக்கள் ரூ. 75 லட்சம் செலவில் சீரமைப்பதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவொற்றி யூர் மண்டலக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல வார்டுக் குழு 17-ஆவது மாதாந்திரச் சிறப்புக் கூட்டம் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் எண்ணூர் தாழங்குப்பம், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, நேருநகர், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பூங்காக்களை சீரமைப்பதற்காகவும், விம்கோ நகர், எண்ணூர் விரைவு சாலை இடையேயான தார்சாலையை ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடவும், பள்ளிக் கட்டடம், நிழற்குடை அமைத்தல், சுகாதார மையங்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ. 2.43 கோடி மதிப்பீட்டிலான பொருள்கள் குறித்த 40 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது,

கவிகணேசன் (12-வது வார்டு):  மழைக் காலத்திற்கு முன்பு மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை முறையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். நகர்புற உள்ளாட்சி நிர்வாகச் சட்டங்களில் மக்கள் சபை கூட்டங்களை நடத்திட வேண்டும்.  பகுதி சபை, வார்டுக் குழு கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உரிய அறிவிப்புகளை செய்யப்பட வேண்டும். இக்கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதன் மூலம் மக்களாட்சியின் சிறப்புகள் வெளிப்படும்.

கே.பி.சொக்கலிங்கம் (5-வது வார்டு) :  மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விம்கோ நகர் மார்க்கெட் மெட்ரோ ரயில் பணிகளால் அகற்றப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றாக ராமகிருஷ்ணா நகரில் மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைத்துத் தரவேண்டும்.

விடுமுறை தினங்களில் ராமகிருஷ்ணாநகர் அருகே கடலில் குளிப்பவர்களை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்திட வேண்டும். இதனால் கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். எர்ணாவூர் மேம்பாலத்தை சீரமைத்து வலுப்படுத்திட வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்குகள் அமைத்துத் தர வேண்டும். சுனாமி குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில் வெளியேற்றப் படும் மழைநீரை எர்ணாவூர் ரயில்வே குளத்திற்கு செல்லும் வகையில் திட்டமிட வேண்டும்.

கே.கார்த்திக் (7-வது வார்டு) :  பல ஆண்டுகளுக்கு முன்பு உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்படுகின்றன. ஆனால் புதிய கட்டடங் கள் உரிய அனுமதியின்றி அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்போடு கட்டப்பட்டப்பட்டுத்தான் வருகின்றன.

இதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். காந்திஜி நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 வீடுகள் அண்மையில் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்துத் தள்ளப்பட்டன.  இதே பகுதியில் 60 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதியை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் இதே போன்றதொரு வழக்கு நடைபெற்று வருகிறது.

இதில் குடியிருப்புவாசிகளுக்கு எதிராக தீர்ப்பு வரும் நிலையில் அடுத்ததாக இதன் அருகாமையில் அமைந்துள்ள மேலும் மூன்று குடியிருப்பு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பழைய குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத வீடுகளை அகற்றும்போது  பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழு மற்றும் கிருமிகள் உள்ளன. தண்ணீரும் மஞ்சள் நிறத்துடன் உப்புக்கரிக்கிறது.  இது குறித்து முறையாக பகுப்பாய்வு செய்த பிறகே குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளி அளிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான வேலைகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும் மாமன்ற உறுப்பினர்கள் மு.சிவக்குமார், ஆர்.ஜெயராமன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினர்.

மாமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மண்டலக் குழு தலைவர் தி.மு. தனியரசு விளக்கம் அளித்தார். மேலும் உறுப்பினர்களின் கோரிக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.  கூட்டத்தில் மண்டல அலுவலர் நவேந்திரன், மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் லீனா, செயற்பொறியாளர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top