Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 75 கலங்கரை விளக்கங்கள் மறு சீரமைப்பு:  கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் டி.கே. ராமச்சந்திரன்

சென்னை

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகச் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன்

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 75 கலங்கரை விளக்கங்கள் மறு சீரமைப்பு  செய்யப்படும் என கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின பெருவிழாவினை கொண்டாடும் வகையில் நாட்டின் சிறப்பு வாய்ந்த 75 கலங்கரை விளக்கங்களை தேர்வு செய்து ரூ. 60 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகச் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன்  சென்னையில் தெரிவித்தார்.

சென்னை கலங்கரை விளக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகச் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் கூறியது,

நாட்டில் ஒட்டுமொத்தமாக 203 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தின் பின்னாலும் வரலாறு, கலாச்சாரம், கட்டடக்கலை உள்ளிட்ட சிறப்பு தகவல்கள் நிறைந்திருக்கும். இந்தியாவில் 1612-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கலங்கரை விளக்கம் கோவாவில் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மிகப் ழமையானது ஆகும். சென்னையில் தற்போதைய கலங்கரை விளக்கம் 1974-ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது.

இதற்கு முன்பு புனித ஜார்ஜ் கோட்டை,  உயர்நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இடங்கள் என 3 கலங்கரை விளக்கங்கள் ஏற்கெனவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது தமிழ்நாட்டில் 26 கலங்கரை விளக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் அருங்காட்சியகத்துடன் கூடிய கலங்கரை விளக்கம் உள்ளது.

சுதந்திர தின பெருவிழா:

75-வது ஆண்டு  சுதந்திர தின பெருவிழா நாடு முழுவது கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நாட்டிலுள்ள 203 கலங்கரை விளக்கங்களில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட 75 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ 60 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் 75 கலங்கரை விளக்கங்களிலும் ‘கலங்கரை விளக்க திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தை கோவாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கலங்கரை விளக்கங்களின் வரலாற்று சிறப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யப்பட்ட கலங்கரை விளக்கங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கலங்கரை விளக்கங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

மேலும் இசை நிகழ்ச்சிகள் சிறுவர்கள் விளையாட்டு உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளன. சென்னையில் உள்ள கலங்கரை விளக்கம் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு விசைப்படகுகள் மற்றும் கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகளுக்கு கடல் வழிகாட்டியாக இருந்து வருகிறது.

சென்னை கலங்கரை விளக்கம் தினமும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப் படுகிறது.

இதற்கான கட்டணம் ரூ. 10 மட்டும் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு முன் அனுமதியுடன் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. களங்கரை விளக்கங்கள் குறித்து பொதுமக்கள் விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றார் ராமச்சந்திரன்.

இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் புனித பீட்ஸ் பள்ளி அரங்கத்தில் கலங்கரை விளக்க திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள், கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும்,  பிரபல பாடகர்களுடன் இசை கச்சேரியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், எண்ணூர் காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரின் சிந்தியா,  இந்திய கடல் சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர், கலங்கரை விளக்கங்களின் இயக்குனர் ஜெனரல் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top