இந்தியாவை ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ காணும் தேசம் என்று சொல்வோம். ஒற்றுமைப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் அதில் இதிகாசங்கள் என்று அழைக்கப்படும் ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பெரும் பங்கு உண்டு. இந்த இரண்டு கதைகளையும் அறியாத இந்தியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலான இந்துக்களின் பெயர்களே இந்த இரண்டு இதிகாசங்ளின் கதைநாயகர்களின் பெயர்கள்தான்.
ராமாணந்த் சாகரின் ராமாயணமும், பி.ஆர். சோப்ராவின் மகாபாரதமும் 1980 களின் இறுதியில் 1990 களின் தொடக்கத்தில் தூர்தர்ஷனில் தொடராக வந்தபோது, இப்போது இருப்பதுபோல் பரவலாக தொலைகாட்சி இல்லாத காலத்திலும், பெரும்பான்மையான இந்துக்கள், குறிப்பாக நகரங்களில், இதைப் பார்த்திருக்கிறார்கள்.
மகாபாரதம் ஒளிப்பரப்பட்ட காலை (9-10) நேரத்தில் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.பெரும்பாலான பத்திரிக்கைகள் முதல் நாளே எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக தமிழாக்கத்தையும் வெளியிட்டார்கள்.அப்படி 1988 அக்.2 தொடங்கி 94 வாரங்கள் ஒளிபரப்பான மகாபாரதத்தின் தமிழாக்கம்தான் இந்த “மகாபாரதம்” நூல் வடிவம். துக்ளக்கில் பணியாற்றிய ‘துக்ளக் வெங்கட்டின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. துக்ளக்கில் வெளிவந்தது.
“ராஜாஜி எழுதிய வியாசர் விருந்திற்குப் பிறகு வெங்கட் எழுதிய மகாபாரதம், எழுத்துலக பட்டியலில் சரியான இடம் பிடித்திருக்கிறது என்பது எனது அபிப்ராயம். ஒரு தொலைக் காட்சி தொடரின் தமிழாக்க வசனங்கள் இத்தனை அழகாக எழுதப்படும் என்பதை இந்நூலைப் படித்து அறிய முடிந்தது” என்று பிரபல எழுத்தாளர் டாக்டர் பிரேமா நந்தகுமார் ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.
“இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்” என்பார் மறைந்த துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள்.முதலில் நான்கு தொகுதிகளாக வந்து பின்னர் வாசகர்களின் வசதிக்காக ஒரே நூலாக 2013 ல் மறுபதிப்பு கண்டது.
1320 பக்கங்கள். விலை ரூ. 800.
பின் குறிப்பு: இன்றைய பாஜக வின் வளர்ச்சிக்கு உதவியதில் ராமாயணம், மகாபாரதம் இரண்டு தொடர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அமைச்சர் ஸ்மிரிதி இராணி உட்பட பலரும் இதில் நடித்தவர்களே. வெளியீடு,T.S.V.Hari,W.W.W.tsvhari.com.
#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை #