Close
நவம்பர் 24, 2024 4:40 மணி

தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய சிஐடியு வலியுறுத்தல்

புதுக்கோட்டை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.முனியசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்து பேசினர். முன்னதாக மாநில நிர்வாகி கே.ரங்கராஜ் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட் சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152 -ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கு குறைந்த பட்ட ஊதியம் அரசாணை எண்.2(4)62 (நாள்.11.10.2017) -ன் படி மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.725 -ம், நகராட்சி ஊழியர்களுக்கு ரூ.610-ம், பேரூராட்சி ஊழியர்களுக்கு ரூ.533 -ம் தினக்கூலியாக வழங்க வேண்டும்.

ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.11,848-ம், மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குனர் களுக்கு ரூ.13,848-ம் மாத ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top