Close
செப்டம்பர் 20, 2024 6:32 காலை

அறிவியல் சிந்தனைகளை உருவாக்கும் திரைப்படங்கள் காலத்தின் தேவை

புதுக்கோட்டை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பாக எழுத்தாளர் எஸ்.இளங்கோ உலக சினிமாக்கள் குறித்து எழுதிய நூலை வெளியிடுகிறார் கவிஞர் தங்கம்மூர்த்தி. நூலாசிரியர் இளங்கோ உள்ளிட்டோர்

அறிவியல் சிந்தனைகளை உருவாக்கும் திரைப்படங்கள் காலத்தின் தேவையாக உள்ளது என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பாக எழுத்தாளர் எஸ்.இளங்கோ உலக சினிமாக்கள் குறித்து எழுதிய ‘டைனோசர்களைத் துரத்துகிறான், ‘தொலை நோக்கியால் பார்ப்பதும் மெய்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் அ.மணிமேகலை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு  கவிஞர் தங்கம் மூர்த்தி பேசியதாவது:

திரைப்படங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. திரைப் படங்களைவிட வேறெந்த ஊடகமும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஹிட்லரே திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டதாக கூறுவார்கள். சார்லி சாப்லின் இயக்கிய ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தை ஹிட்லர் பார்க்கும் போது, அவர் மனதில் சில சலனங்களை அந்தப் படம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

திரைப்படங்களில் உலக சினாமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா எனப் பலவகை உண்டு. சமூக நலனைப் பிரதிபலித்த, அக உணர்வுகளை மிகப்படுத்தாமல் வெளிப்படுத்திய, குழந்தைகளை மையப் படுத்திய திரைப்படங்களை, அறிவியல் சிந்தனைகளில் உருவான திரைப்படங்களை எழுத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.இளங்கோ.

அறிவியல் சிந்தனைகளை உருவாக்கும் படங்களை எடுப்பதும், அதை வெகு மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. தொடர்ச்சியாக அத்தகைய படங்களைத் திரையிட்டும், அதுகுறித்த நூல்களை எழுதியும் வருவது மிகவும் பாராட்டுக்குரியது. உலக சினிமாக்களின் உயரங்களை, நுணுக்கங்களை, கதைக் களங்களை எளிய மொழியில் எஸ்.இளங்கோ படைத்துள்ளார் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

மேனாள் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.சேவியர், மருத்துவர் நா.ஜெயராமன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாத்அலி, குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.அழகப்பன்,

தமுஎகச மாவட்டத் தாலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின்சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன், திரைப்படப் பாடலாசிரியர் இரா.தனிக்கொடி, திருச்சி வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலெட்சுமி, கவிஞர்கள் மைதிலி கஸ்தூரிரெங்கன், மு.கீதா உள்ளிட்டோர் பேசினர்.

நூலாசிரியர் எஸ்.இளங்கோ ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக ஆ.பாண்டிச்செல்வி வரவேற்றார். த.ரஞ்சனி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top