Close
நவம்பர் 23, 2024 1:04 மணி

ஞானாலயா ஆய்வு நூலக ஆவணப்படம் வெளியீடு..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஞானாலயா நூலக ஆவணப்பட வெளியீ ட்டு விழா

புதுக்கோட்டையின் பெருமைமிகு அடையாளமாகவும் உலகப் புகழ்பெற்ற ஞானாலாயா  ஆய்வு நூலகம் மற்றும் அதை நிறுவிய பா. கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி  அவர்களைப் பற்றிய ஆவணப்படம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை(10.10.2023)   நடைபெற்றது.

புதுக்கோட்டையின் முக்கிய அடையாளமாகத்திகழும் வெஸ்ட் திரையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் தங்கம்மூர்த்தி வரவேற்றார்.

புதுக்கோட்டையில் உலகப் புகழ்பெற்ற ஞானாலயா என்ற நூலகம் உள்ளது.  அங்கு  ஒரு லட்சத்து 30ஆயிரத்துக்கும் மேலான புத்தகங்கள் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகின்றன.. புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து பல அறிஞர்க ளும் ஆய்வறிஞர்களும், மாணவர்களும் பயன்பெற்றுச் செல்கின்றனர்.

இந்த ஞானாலயா ஆய்வு  நூலகத்தைப் பற்றி ஆவணப்படம் எடுத்த  திருச்சியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார்  பங்கேற்று அறிமுக உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக, மாநிலங்களவை  திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த ஞானாலயா நூலகத்தில் வைத்திருக்கும் புத்தகங்களில் பெரும்பாலானவை முதல் பதிப்பாக இருக்கிறது. இது உலகில் வேறெங்கும் இல்லாததொரு சாதனையாகவும் பார்க்கப் படுகிறது.புதுக்கோட்டையின் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்கிறது.   அந்த வகையில் எனது தமிழாசிரியாகவும் வகுப்பாசிரியராகவும் இருந்த கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் மாணவர்களில் முதல் எம்பியாக நான் இருக்கிறேன்.

புதுக்கோட்டை
ஞானாலயா ஆய்வு நூலக ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேசுகிறார், எம்பி அப்துல்லா

எனக்குப் பிறகு இன்னும் யார் யாரெல்லாமோ அதாவது அவரது மாணவர்களில்  கீரை.தமிழ்ராஜா உட்பட யார் வேண்டுமானாலும்  நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  ஆனாலும் அத்தனை பேரிலும் நான்தான் அவரது  நூலகத்தின் முதல் பதிப்பு புத்தகத்தைப் போல  எம்பி ஆகி இருக்கிறேன். இது யாருக்கும் கிடைக்காததொரு வாய்ப்பாக இருக்கிறது.

தலைநகர் தில்லியில்  பலரும் ஞானாலயா  நூலகத்தைப்  பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  ஞானாலயாவைப் பற்றியும் அய்யாவைப் பற்றியும் விசாரிப்பார்கள். நானும் பகிர்ந்து கொள்வேன்.

அப்போதெல்லாம் அய்யாவை நேரில் சந்திக்க முடியாததை என்னைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். நானும் அவருடைய மாணவர் என்று சொல்லி சின்னதாகப் பெருமைப் பட்டுக்கொள்வேன்.

இங்கு அருணகிரி என் நண்பர்  வந்திருக்கிறார். முகநூலில் அருணகிரி, சங்கரன்கோவில் என்ற பெயரில் இருக்கிறார். அவர் அடிக்கடி பார்க்கிற எல்லோரிடமும்  உங்கள் வரலாற்றை  எழுதுங்கள் என்பார்.

எனக்கென்ன வரலாறு இருக்கிறது என்று  கேட்கிறபோது. நீங்கள் வாழும் முறைதான் வரலாறு அதை எழுதுங்கள் என்பார். மேலும், உங்கள் குடும்பத்தைப் பற்றி எழுதுங்கள். உங்கள் முன்னோரைப் பற்றி எழுதி வையுங்கள். அதை உங்கள் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பார்ப்பார்கள். அதுதான் உங்களுக்கான, நீங்கள் வாழ்ந்ததற்கான வரலாறு.

இந்தப் படத்தில்கூட அலையன்ஸ் புத்தகப் பதிப்பாளர் சீனிவாசன்  சொல்லும் போது,  ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், அது புதிய பதிப்பாக  வெளிவந்தால் அது இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு வாழும் என கிருஷ்ணமூர்த்தி கூறுவார் என்றார்.

அய்யாவின் மருமகன்கூடச் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி அய்யாவிற்குப் பிறகு நாங்களும் எங்கள் பிள்ளைகளும் இந்த நூலகத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறை யினருக்கு  எடுத்துச் செல்வோம் என்று.

இந்த பெருமையும் வரலாறும் எத்தனை குடும்பத்தினருக்கு எத்தனை தலைமுறையினருக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் அய்யாவின் குடும்பத்தில் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனது குடும்பத்தில்கூட எனது தந்தையார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வந்தார். அவருக்குப் பின் என்னை நடத்தச் சொல்லி வந்தார்.

ஆனால் அதை நான் செய்யவில்லை. அவருக்கு அந்தக் கடையை நடத்துவது ஒன்றுதான் குறிக்கோள். அதை நான் செய்யவில்லை என்பதோடு நாடறிந்த அரசியல்வாதிகளில் நான் ஒருவனாக இருக்கிறேன் என்பது அவருக்குப் பெருமையாகவும் தெரியவில்லை.

அந்த வருத்தத்திலேயே அவரும்  கடைசி வரை இருந்தார். அவர் இருக்கும்வரை  அந்தக் கடையில் நான் இருந்தேன். அதற்குப் பின் அந்தத்தொழிலை நான் விட்டு விட்டேன்.

இது கவிஞர் தங்கம்மூர்த்திக்கு  நன்றாகத் தெரியும். அந்த ஆர்வமும் அக்கறையும் இருப்பவர்கள்தான் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்க்க இயலும்.அந்த வகையில் அய்யாவின் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அதனைப் பாதுகாக்கும் பணியில் என்னையும் இணைத்துக் கொள்வேன். கவலிஞர் தங்கம் மூர்த்தி  சொன்னதைப் போல எத்தனையோ ஆலயங்கள் இருந்தாலும் ஞானத்திற்கென்று ஞானாலயா இருக்கிறது.  இந்தப் பேரை நினைக்கும்போதே நிறைய சிந்தனைகள் நமக்கு வருகின்றன.

கோவில்களும் பள்ளிவாசல்களும் சர்ச்சுகளும் ஆலயங்கள் தான். ஆலயத்திற்குச் சென்றால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்து விட்டால் ஆலயத்தை விட்டுவிடுவோம். நம்முடைய பிறப்பு என்ன? படைப்பு என்ன? உலகின் தத்துவங்கள் தெரிந்து விட்டால் சாங்கியத்தை விட்டு விடுவோம்.

ஆலயங்கள் நமக்குத் தேவைப்படாது. அது வந்து ஆத்திகர் களுக்கு. அதே நேரத்தில் ஞானத்தை இலக்கியங்கள் மூலமாக புத்தகங்கள் மூலமாக அடையலாம். அப்படியொரு ஆலயமாக ஞான ஆலயமாக நம்மிடையே அமைத்து ஒரு வரலாறாகவே நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மரியாதைக்குரிய நம்முடைய கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த நேரத்தில் வணங்குகிறேன்.

எத்தனையோ பேர் இங்கு இருக்கின்றோம். என்னுடைய அப்பாவிற்கு இருந்த கவலை வேறு யாருக்கும் இருக்கக் கூடாது. என் அப்பாவின் கவலைக்குக் காரணமாக இருந்தேன்.  ஆனால், நான் உங்களது கவலைக்கு  ஆறுதலாக,  உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா.

இதில், விழாக்குழுவினர்  மருத்துவர் ச. ராமதாஸ்,  சத்யராம் ராமுக்கண்ணு, மருத்துவர் ந. ஜெயராமன், அ.லெ. சொக்க லிங்கம், பேராசிரியர் சா. விஸ்வநாதன் மற்றும், வைர மாணிக்கம், இளங்கோ, கல்வியாளர்கள் ஆர். சிவாஜி,  குருதனசேகரன், பி.எஸ். கருப்பையா,

ஜெயபாலன், ராசி.பன்னீர்செல்வம்,வெஸ்ட் திரையரங்க உரிமையாளர் மற்றும்  ஞானாலயா குடும்பத்தினர், வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட திரளானோர் கலந்து  கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top