சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா வினையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வடசென்னை மணலி புது நகரில் ஐயா வைகுண்ட தர்மபதி கோயில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, கடந்த அக்.6-ந் தேதி வெள்ளிக்கிழமை திருநாம கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை ஒட்டி தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளங்கள் முழங்கின. ன்னர் இலுப்பை, தேக்கு மரங்களைக் கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடைகொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதி களில வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தே வந்திருந்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற ‘அய்யா அரோகரா சிவ, சிவா அய்யா உண்டு” என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர் . தேர் வீதி வலம் வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நிலையை அடைந்தது.
தேர் செல்லும் வழியில் பக்தர்களுக்கு நீர்,மோர் அன்னதானம் வழங்கினர். இரவு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதனைத் தொடர்ந்து இனிமம் வழங்கப்பட்டு திருநாமக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், ஆகாஷ் சிறப்பு மருத்துவனை தலைவர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், செயலாளர் ஏ.சுவாமி பொருளாளர் ஜெயக்கொடி, நிர்வாகிகள் சுந்தரேசன், ஐவென்ஸ், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.