திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான காமராஜ் (33) வியாழக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஆர்.விவேகானந்தன். விம்கோ நகரில் உள்ள அரசு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இவரது மகன் காமராஜ் (33) மாநகராட்சி, மின்சாரம், பொதுப்பணித் துறை உள்ளிட்டவைகளில் ஆர்.வி. எஞ்சினியரிங் என்ற பெயரில் ஒப்பந்தப் பணிகளை மேற் கொண்டு வருகிறார்.
இவர் வியாழக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் அருகில் உள்ள சின்ன ஏர்ணாவூர் பூம்புகார் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நுழைந்தபோது சுமார் ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல் திடீரென அவர் மீது சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது காமராஜ் கூக்குரல் எழுப்பியதையடுத்து அங்கி ருந்து கொலையாளிகள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காமராஜை அருகில் வசிக்கும் சிலர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காமராஜ் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காமராஜுவின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெறும் எனவும் பிறகு காமராஜுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.
எண்ணூர் சரகம் ஆவடி காவல் ஆணையகரத்தில் இணைக் கப்பட்ட பிறகு முக்கிய பிரமுகர் படுகொலை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டுள்ள நிலையில் இதன் பதிவுகளின் அடிப்படையில் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் கொலையாளிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் வியாழக்கிழமை இரவு வரை கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. பட்டப் பகலில் நடைபெற்ற இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு இருந்து வருகிறது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.