Close
செப்டம்பர் 20, 2024 6:40 காலை

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக திகழும் காட்டுபாவா பள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் நடைபெற்ற சந்தனக்கூடு விழா

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை நள்ளிரவு விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூரின் தர்காவில் அடக்கமாகி இருக்கும் பாவாபக்ருதீன் அவ்லியா காட்டு பாவா என அழைக்கப்பட்டதால் இந்த ஊர் காட்டுபாவாபள்ளிவாசல் என்றழைக்கப்படுகிறது. இந்த பள்ளிவாசலானது முஸ்லீம்களும் இந்துக்களும் பெருமளவில் சென்று வழிபடும் தலமாக திகழ்கிறது.

இந்த தர்காவில் அடக்கமாகியுள்ள காட்டுபாவா குறித்த வரலாற்றை காட்டுபாவா காரணீகம் எனும் பாடலில் பின் வருமாறு விளக்குகிறது. கிபி 17 -ஆம் நூற்றாண்டில் அரேபிய நாட்டைச் சேர்ந்த சையதுபக்ருதீன் அவ்லியா எனும் மகான் திருமயத்துக்கு அருகிலுள்ள காட்டில் தங்கியிருந்தார். இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல்அமீது அவ்லியாவின் பேரன் உறவுமுறை ஆவார்.

அப்போது புதுக்கோட்டையில் நடைபெற்ற தசரா விழாவைப் பார்த்துவிட்டு இந்தக்காட்டுப்பகுதி வழியே இரு குழந்தைகளுடன் சென்ற பிராமணப் பெண்கள் பாவாவின் பாதுகாப்பை நாடியதால், அவரும் துணையாகச் உடன் சென்றார். அப்போது இவர்களை வழிமறித்த கள்வர்கள் 14 பேருடன் பாவா சண்டையிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

மீதமுள்ளவர்கள் தப்பிச்சென்றனர். அதில், புதரில் மறைந்திருந்த ஒரு கள்வன் பாவா மீது வாளை எய்தியதால் பலத்த காயமுற்ற நிலையில் தனது சக்தியால் ஏழு கள்வர்களின் கண்களையும் குருடாக்கினார். தங்களது தவறை உணர்ந்த கள்வர்கள் தங்களுக்கு மீண்டும் பார்வை அளிக்க வேண்டினர்.

ஆனால், ஒருவருக்கும் மட்டும் பார்வை கிடைக்கச்செய்து அவருடன் வந்த பெண்கள் மட்டும் குழந்தைகளை சொந்த ஊரில் பத்திரமாகச் சேர்த்த பிறகே மற்ற கள்வர்களுக்கு பார்வை அளிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பாவாவின் கட்டளைப்படி பெண்களை அவர்களது ஊரில் பத்திரமாக சேர்த்துவிட்டு திரும்பி வந்த பிறகே மற்றவர்களுக்கு பார்வையளித்தார். இதையடுத்து சில காலம் வாழ்ந்தபின் பாவா மரணமடைந்தார்.

இதைதத்தொடர்ந்து பாவா அடக்கமான இடத்தில் அப்பகுதி மக்களால் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு ஆர்காடு நவாப் முகமதலியும் அவரது பரம்பரையினரும் கொடையளித்தனர். புதுகை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இந்த தர்காவுக்கு தாராளமாக நிதியுதவி செய்தனர்.

1696 -ல் கிழவன் சேதுபதி காலத்தில் இந்த தர்காவுக்கு கொடை வழங்கிய செய்தி இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்ட திகழும் தலங்களில் முக்கியமானதாக இப்பள்ளிவாசலில். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா முஸ்லீம்கள் இந்துக்களால் வெகு விமரிசையாகக் கொண்டா டப்படுகிறது.
நிகழாண்டுக்கான சந்தனக்கூடு விழா (16.10.2023) திங்கள் கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைய டுத்து 15 நாள்கள் தினமும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி  செவ்வாய்க்கிழமை (31.11.2023)அதிகாலை சுமார் 3 மணி வரை மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக் கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம் வாண வேடிக்கை களுடன் நடைபெற்றது. மறுநாள் புதன்கிழமை இரவு அரண்மனை கந்தூரி செய்து அன்னதான நிகழ்வும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஜமா-அத் நிர்வாகிகள் எஸ்.முகமதலிஜின்னா, எஸ். அப்துல் லத்தீப், ஏ. முகமதுசிராஜுதீன், எஸ். பக்ருதீன், ஏ.சகுபர்அலி, சையதுஉசேன், நியாஸ்முகமது, முகமது அப்துல்லா மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
இதையொட்டி, பொன்னமராவதி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
(பட விளக்கம்-புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவாபள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்னலங்காரத்துடன் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top