Close
நவம்பர் 21, 2024 9:33 மணி

லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் சில குறிப்புகள்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

லண்டன் முருகன் கோயில்

 லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் சில குறிப்புகள்…

இந்த கோவில் 1975  -இல் ஒரு தொண்டு நிறுவனமாக நிறுவப் பட்டது. அறக்கட்டளையின் நோக்கம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக, அவர்களுடைய இஷ்ட தெய்வமான முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்பதாகும்.

ஏப்ரல் 1975 இல் லண்டனில் உள்ள ஹாரிங்டன் சதுக்கத்தில் முதல் பூஜைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய லண்டனில் உள்ள ரசல் சதுக்கத்தில் மாதாந்திர பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கார்த்திகையை ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் லண்டனின் பல்வேறு பகுதிக ளிலிருந்தும் பக்தர்களை ஒன்று திரட்டி, அறநிலையத்துறை ஒன்று நிறுவப்பட்டது.

எழுபதுகளின் பிற்பகுதியில், பிரார்த்தனைக் கூட்டங்கள் கிழக்கு லண்டனுக்கு இடம்பெயர்ந்தன. மேனர் பூங்காவில் பிரவுனிங் சாலையில் கோயில் கட்டப்படும் வரை பல ஆண்டுகளாக உள்ளூர் இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

கோயிலின் முதல் கும்பாபிஷேகம் பிப்ரவரி 1984 -இல் நடந்தது. கோயில் சிறியதாகவும், அடக்கமாகவும் இருந்தாலும், அது பிரபலமடைந்தது. பக்தர்கள் தொடர்ந்து கோயிலுக்கு வர தொடங்கினர்.

அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் இலக்கானது, அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெரிய கோயிலையும், பாரம்பரியமான தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைக் கொள்கைகளுக்கு இணங்கக் கூடிய ஒரு கோயிலையும் கட்டுவதாகும்.

அதன்படி தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட ஆன்மிக பெரியவர்களின் முயற்சியால், 2005 ஆம் ஆண்டில், 50 அடி ராஜகோபுரத்துடன் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமான புதிய ஆலயத்தை திறப்பதன் மூலம் இந்த இலக்கு எட்டப்பட்டது.

தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைக்கு மிகவும் ஒத்துப் போகிற இந்த ஆலயம் பிரார்த்தனைக்கான இடமாக மட்டுமல்லாமல், சமூக மற்றும் கலாசார சேவைகளுக்கான ஒரு அற்புதமான சமூக மையமாகவும் திகழ்கிறது.

இந்த கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தமிழ்நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இந்து கல்வி மையங்களில் இருந்து, பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இருந்து வந்தவர்கள். இங்கிலாந்து வாழ்மக்கள், தங்கள் வீட்டு திருமணம் மற்றும் புதுமனை புகு விழா போன்ற மங்களகரமான வைபவங்க ளுக்கு பிரார்த்தனை செய்து, வழிபாடு நடத்துமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இதன் மூலம் நம் கலாசார பண்பாட்டு விழுமியங்களை ஒரு தொடர் சங்கிலியாக இங்குள்ள இளைய தலைமுறையி னரிடம் கடத்த முடிகிறது.ஆழ்மனமும், இறை சக்தியும், இயற்கை சக்தியும் ஒன்று என்ற உண்மைத் தன்மையை உணரும் வரை, மனம் போராடிக் கொண்டுதான் இருக்கும்.ஆகவே அந்த ஆழ் மனோசக்தியை,ஆன்மீக சக்தியின் மூலம்தான் பெறமுடியும் என்று முன்னோர்கள் ஆலயம் மூலம் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

எல்லா மக்களும் இயற்கையின் மூலமாக இறைசக்தியை பெற முடியாது என்ற காரணத்தாலேயே ஆலயங்கள் எழுப்பப்பட்டன.

லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் தற்போது லண்டன் போரோ ஆஃப் நியூஹாமில் நன்கு பிரசித்தி பெற்ற, அப்பகுதிக்கான ஒரு அடையாளமாக உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவில் வசிக்கும் ஏராளமான தமிழர்களும் பக்த கோடிகளும் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான பூஜைகளும், வழிபாடும் நடத்தப்பட்டாலும், குறிப்பாக, தேர் திருவிழாவில் முருகப்பெருமான் அழகிய தேரில் வீதி உலா வரும் போது, சுமார் 10,000 பார்வையாளர்களை ஈர்ப்பது கண்கொள்ளா காட்சி.

இங்கிலாந்திற்கு சுற்றுலா வருபவர்கள் குறிப்பாக ஆன்மிக வாதிகளாக இருக்கும்பட்சத்தில், அவசியம் ஒரு முறை இந்த கோயிலுக்கு வருகை தரலாம்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top