Close
நவம்பர் 24, 2024 12:37 காலை

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணிகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

விராலிமலை பகுதியில் நடைபெற்று வரும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத்திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலமெடுப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலமெடுப்புப் பணிகள் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி, பாலம் அமைக்கும் பணி மற்றும் தொட்டிப்பாலம் அமைக்கும் பணி ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங் களில் விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரமான பாசன நீர் கிடைக்கும் வகையில், காவிரி – வைகை – குண்டாறு வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை
திட்டபணிகளை அதிகாரிகளுடன்ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

அதன்படி, காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, கட்டளை கதவணையை இணைப்பு கால்வாய் பிரியும் இடத்தில் காவேரியில் ரூ.165 கோடியில் அமைக்க கட்டுமான பணிகள் 09.02.2009 அன்று தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. இத்திட்டம், தெற்கு வெள்ளாறு வரை வெள்ளநீர் இணைப்பு கால்வாயாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு ரூ.6941 கோடிக்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளநீர் இணைப்பு கால்வாய், கரூர் மாவட்டத்தில் நெடுகை 0.000 கி.மீ. முதல் நெடுகை 4.100 கி.மீ. வரையிலும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டதில் நெடுகை 54.695 கி.மீ.முதல் நெடுகை 60.050 கி.மீ. வரையிலான இரு பகுதிகளை செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ள ரூ.331.00 கோடியில் நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டர் பட்டா நிலங்களும், திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டர் பட்டா நிலங்களும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 572.56 ஹெக்டர் பட்டா நிலங்களும் தேவைப்பட்டன. 2020-21 ஆம் ஆண்டு நிலமெடுப்பு பணிகளுக்கு ஆகஸ்ட் 2020-ல் ரூ.600 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.34.31 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டு, 28.99 ஹெக்டேர் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

2021-22, 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் நிலமெடுப்பு பணிகளுக்கு ரூ.866.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 601.15 ஹெக்டர் பரப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நிலமெடுப்பு பணிகளை இந்நிதியாண்டிலேயே முழுமையாக நிறைவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருட நிதி ஒதிக்கீட்டிலும் வருட இறுதியில் செலவீனம் போக உள்ள நிதியினை இருப்பில் வைத்து கொண்டு நிலமெடுப்பு பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற அரசாணை வழங்கப்பட்டு, நிலமெடுப்பு பணிகள் விரைவாக நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.

செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால்வாய் அமைக்கும் இரண்டு பணிகளின் முக்கியத்துவம் கருதி 2021-22 -ஆம் ஆண்டு முதல், மாநில நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 30.09.2023 வரை முதல் பகுதி பணிக்கு ரூ.90.60 கோடியும் மற்றும் இரண்டாம் பகுதி பணிக்கு ரூ.108.66 கோடியும் செலவினம் மேற்கொள்ளப்பட்டு 78% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நிதியாண்டு 2023-24-ல் செயாலக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ.111.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்நிதியாண்டிலேயே இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்திட பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் நிலமெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி-வைகை-குளண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்ட பணிகளுக்காக 21 கிராமங்களில் 441.95.24 ஹெக்டேர் பட்டா நிலங்கள் மற்றும் 143.09.86 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக மொத்தம் 585.05.01 ஹெக்டேர் நிலங்கள் கையகம் செய்யப்பட உள்ளது .

பட்டா நிலங்களில் 110.50.0 ஹெக்டேர் நிலங்கள். தனிநபர் பேச்சுவார்த்தை மற்றும் நிலமெடுப்புச் சட்டத்தின் மூலமும் இதுவரை மொத்தம் 237.97 ஹெக்டேர் நிலங்கள் கையகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை தனிநபர் பேச்சுவார்த்தை மற்றும் நிலமெடுப்புச் சட்டத்தின் மூலமும் கையகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 கிராமங்களுக்கு இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசால் செயல்படுத்தப்படும் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றிட தேவையான நிலமெடுப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) சிவக்குமார், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, உதவி செயற்பொறியாளர்கள் உமாசங்கர், முருகேசன், விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா, குன்னத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top