Close
நவம்பர் 23, 2024 10:02 காலை

புத்தகம் அறிவோம்…தீபாவளி(தினமணி) சிறப்பு மலர்… …

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

வழக்கம் போல் தீபாவளிக்கு முதல் நாள் தினமணி தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது.

வள்ளலார் ஒரு சமரச ஞானியாக திகழ்ந்ததோடு, ஒரு சமத்துவவாதியாகவும் விளங்கினார். சமத்துவவாதிகள் பலருள்ளும் வேறு யாரும் செய்யாத ஒரு புதுமையையும் அருட்பிரகாசர் செய்தார். பொருளியலாளர்கள் அனைவரும் இருப்பவர்கள் – இல்லாதவர்கள் என இரண்டு வர்க்கங்ளைப் பற்றிதான் பேசினார்கள், எழுதினார்கள். யாரும் இந்த இரண்டிற்கும் இடையே இருக்கின்ற நடுத்தர வர்க்கத்தை மறந்துவிட்டனர்.

மேல் தட்டு மக்களை எட்ட முடியாமலும் கீழ்த்தட்டு மக்களிடத்து போக முடியாமலும் இடையில் தத்தளிக்கும் வர்க்கம் நடுத்தர வர்க்கம். இந்த நடுத்தட்டு மக்களைப் பற்றி இந்த நாடு மட்டுமன்று; வேறு எந்த நாடும் கவலைப்படுவதில்லை. அந்த நடுத்தர வர்க்கத்தைப் பற்றிக் கவலைப்பட்ட ஒரே ஞானி வள்ளலார்.
-பேராசிரியர் இராஜகோபாலன், “எனது பார்வையில் வள்ளலார்” கட்டுரையில்(பக்.35).
வழக்கம் போல் தீபாவளிக்கு முதல் நாள் தினமணி தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது.

ஆன்மீகம்,
இலக்கியம்,
காட்சியகங்கள்,
இஸ்ரோ விஞ்ஞானிகள்,
என்ன புதுசு,
சினிமா,
படக்கட்டுரைகள்,
தேடி எடுத்த சிறுகதைகள்,
சிறுகதைகள் – என்ற தலைப்புகளில் மலர் உருவாக்கப்பட்டுள்ளது.

அட்டைப்படத்தில் உள்ள வாரணாசியைப்பற்றி அதன் பெயர்க்காரணம் (வருண, அஸி என்னும் இரு நதிகள் இணையும் இடத்தில் அமைந்திருப்பதால் இந்நகரம் வாரணாசி என்றழைக்கப்படுகிறது) அதன் சிறப்புகள், தமிழகத்தோடு உள்ள தொடர்புகளைப் பற்றியெல்லாம் சுதா சேஷய்யன் சிறப்பான ஒரு கட்டுரையைத்தந்துள்ளார்.

‘எனது பார்வையில்,’ என்ற தலைப்பில், அருணகிரிநாதர். சேக்கிழார், வள்ளலார், திருமூலர், பாரதியார்.கபிலர்,கம்பர் – பற்றி முறையே, சுதா சேஷைய்யன், தெ.ஞானசுந்தரம், தி. இராஜகோபாலன், அரங்க.இராமலிங்கம், ய. மணிகண்டன், கிருங்கை சேதுபதி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பானதொரு அறிமுகத்தைத் தந்துள்ளனர்.

மலரில் இரண்டு முக்கிய சிறப்புகளைக் குறிப்பிட வேண்டும். ஒன்று தேடி எடுத்த கதைகள் என்று கு.ப.ராஜகோபாலன், கல்கி, லா.ச.ராமாமிர்தம்,கு அழகிரிசாமி, சுஜாதா – சிறுகதை களை தேடி எடுத்து தந்துள்ளது. இரண்டு கி.ராஜநாராயணன் நூற்றாண்டை (1922 – 2023) கொண்டாடும் வகையில் அவரின் “கிடை” நாவல் போனஸ் ஆக கொடுத்திருப்பது (தனியாக வாங்கினால் கிடைக்கு 70 ரூபாய் அன்னம் பதிப்பகத்திற்கு கொடுக்க வேண்டும்).

இஸ்ரோ விஞ்ஞானிகள், மயில்சாமி அண்ணாதுரை, ந.வளர்மதி, ப.வீரமுத்துவேல்,  தேன்மொழிச் செல்வி, நாராயணன், நிகார் சாஷி – ஆகியோர் தங்களுடைய சாதனைகளையும் அதற்கு பின்னால் இருந்தவர்கள் பற்றித் தந்திருக்கும் குறிப்புகள் மாணவர்களுக்கு பயன்படும் சிறந்த குறிப்புகள்.

புதுக்கோட்டை, “ஞானாலயா ஆய்வு நூலகத்தைப்” பற்றி சிறப்பாக, சா. ஜெயப்பிரகாஷ் புதிய கோணத்தில் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது புதுக்கோட்டைக்கு கிடைத்த சிறப்பு.

தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், ‘அன்பே தவம்’ நூலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வைத்திருக்கும் வேண்டுகோள் போல், இந்த மலரில் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

“ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல், மாற்று உடையில்லாமல் நம்மிடையே எத்தனை எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் ஆசை இருக்கிறது.  கூடவே வறுமையும் இருக்கிறது. தெருவோரமோ ஓலைக்குடிசையோ அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்களுடைய பெற்றோருடன் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பை இழந்து, எத்தனை எத்தனையோ அநாதை இல்லங்களில் பல பிஞ்சு உள்ளங்கள் தவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கும் வயோதிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

நமது தீபாவளிக் கொண்டாட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டாமா? அவர்களும் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்துக் களிப்பதை நமது தீபாவளிக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். என்பதுதான் இந்த ஆண்டும் விடுக்கும் வேண்டுகோள்.”நம்முடைய விண்ணப்பமும் அதுவே.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top