சிறு குழந்தையாக இருந்த போதே இயற்கையின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. நான் கற்ற சர்வதேச பள்ளிக்கூடம் இயற்கைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. இயற்கை, புழு பூச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாகக் கற்றோம். இதன் தாக்கம் வாழ்நாள் முழுக்க என்னிடம் இருந்தது என்று நினைக்கிறேன்.(பக்.35).
பூக்களைக் காட்டிலும் மரங்களையே அதிகமாக நேசித்து வந்திருக்கிறேன். விலங்குகள் மீதான ஆர்வம் எப்போதும் எனக்குண்டு. குழந்தையாக இருந்தபோதே வாழ்வின் ஆதாரமாக மரங்களை நான் காண்பதுண்டு.
அடைக்கலமாகவும் அவை எனக்கிருந்தன. விளையாடுவதற்கு மட்டுமல்லாது அங்கே என்னால் ஒளிந்துகொள்ளவும் முடியும் என்பதால். அங்கே எனக்கான சின்னச் சின்ன இடங்கள் உண்டு.
புத்தகங்களை எடுத்துக்கொண்டு அங்கு சென்று வாசிப்பேன். யாரும் என்னைத் தொந்தரவு செய்ய முடியாது. வெகுநேரம் கழித்து தாமதித்தே வீடு திரும்புவேன். பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும் எனக்கு பிடித்தமான மரத்தை தேடிச் செல்லும் வழக்கம் எனக்கிருந்தது.
‘அவளை எங்கே காணேம்? அவள் எங்கே போனாள்?’ எனக் கீழே சிலர் எழுப்பும் குரல் என் காதில் விழும். ஆனால் எப்போது வர வேண்டுமென்று தீர்மானிக்கிறேனோ அப்போதுதான் மரத்தைவிட்டு இரங்குவேன்.(பக்.39 – 40).
‘மரங்களின் தோழியாகவே என்னை எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். அவற்றின் தோழமையை அனுபவித்தி ருக்கிறேன். பெரியவர்களின் உலகிலிருந்து அவ்வப்போதைய புகழிடமாக இருக்கும் காரணத்தால் மரங்கள், துறுதுறுப்பான எல்லா பிள்ளைகளுக்கும் பிடித்தமானவை.
கிளைவிட்டு படர்ந்து நிற்கும் சில மரங்கள் இந்தியாவின் தகிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பவை. பூக்கும் மரங்களோ வண்ணமலர்கலாய் வெடித்து மலரக் காத்திருப்பவை. கரடுமுரடான வயதான மரங்களோ வரலாற்றின் ஊமைச் சாட்சிகளாய் நிற்பவை.(பக். 40).
19.11.2023, இன்று, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்.அவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றியே ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அவர் ஒரு சூழலியல் ஆர்வலர்; மரங்களையும், பறவைகளை யும், விலங்குகளையும் நேசித்தவர்; அவைகளின் பாதுகாப்பிற்கு உகந்த சட்டங்களை இயற்றியவர் என்பது பலரும் அறியாத ஒன்று.காணுயிர் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த திட்டமான ‘புலிகள் பாதுகாப்புத் திட்டம்’ உருவாகக் காரணமாக இருந்தவர்.
அது மட்டுமல்லாது முதலை, சிங்கம், காஷ்மீர் மான். கொக்குகள், கானமயில், பூ பெருங்கொக்குகள் மற்றும் அழியும் அபாயத்திலுள்ள பிற உயிரினங்களின் பராமரிப் பிற்காக பல முயற்சிகள் எடுத்தவர் . கானுயிர் பாதுகாப்புச் சட்டம் , வனப்பராமரிப்புச் சட்டம் அவர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவை.
அந்தமான் காடுகள், மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் அதிகம் பாதிப்படையாமல் இன்றும் இருப்பதற்கு அவரே காரணம். இந்த நூல், அவர் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு செய்த சிறப்புமிக்க பணியைப் பற்றிப் பேசுகிறது.
ஜெயராம் ரமேஷ் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். நல்ல சிந்தனையாளர். அவர் இந்திராகாந்தியை ஒரு புதிய மனிதராக, இயற்கை நேசராக, பறவைகளின் விலங்குகளின் பாதுகாப்பாளராக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இந்நூலின் வழி. அதோடு
இந்தியாவின் சூழலியல் வரலாற்றையும் நமக்குத் தருகிறார்.
முடவன் குட்டி முகம்மது அலியின் தமிழாக்கம் சிறப்பு ; மூலநூலை வாசிப்பது போன்றே உள்ளது.வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,நாகர் கோவில்.(பக்.611) விலை ரூ.295.
# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #