திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் நீதி கேட்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருமயத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் திருமயம் வட்டத்தலைவர் ஏ.பி. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணைச்செயலாளர் ஆர்.எம். சிதம்பரம் கவன ஈர்ப்புப் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் பேசினார். வட்டச்செயலர் எம். சிவா வரவேற்றார். வட்டப் பொருளாளர் எல், பெரியசாமி நன்றி கூறினார்.
கோரிக்கைகள்: பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் எவரேனும் இறந்துவிட்டால் அதன்பிறகு அந்த குடும்பம் வாழ வழிதெரியாமல் தவிக்குமே என்பதை புரிந்து கொண்டு கடந்த 1999ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கினார். ஆனால் அந்த உத்தரவு கடந்த 08.03.2023 அன்று கருணையே இல்லாமல் நிறுத்தப்பட்டது
ஊனமுற்றவர்கள் என்று சொன்னால் மனதளவில் அவர்கள் மனது புண்படும் என்று நினைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாற்று திறனாளிகள் என்று பெயரிட்டார் அப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாற்றுதிறனாளிகள் மீது கருணைகொண்டு அவர்களின் வாழ்க்கை மேம்படுத்துவ தற்கான கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்தார். ஆனால் அவரது வாரிசு நடத்தும் ஆட்சியில் மாற்றுதிறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்றுவந்த எரி பொருள் படி ரூ.2500/- தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
01.01.2023 க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியதை இதுவரை நிறைவேற்றவில்லை. CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவது.
24 மணி நேரப் பணியில் உள்ள கிராம உதவியாளர்களுக்கு கூலியாக சிறப்பு காலம் முறை ஊதியத்திலிருந்து தங்களை வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதிய D பிரிவில் இணைக்க 30 ஆண்டு காலமாக வேண்டுவது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 15.11.2023 அன்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
23.11.2023 -வியாழக்கிழமை மாலை தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, திருமயம் உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகளும், வருவாய் கிராம ஊழியர் சங்க உறுப்பினர் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வரும் 7.12.2023 அன்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை 3.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை காத்திருப்பு போராட்டமும், 19.12.2023 அனைவரும் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டமும், 28.12.2023 அன்று மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காலை 10. மணிமுதல் மாலை 5. மணி வரை தர்னா போராட்டமும் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.