Close
நவம்பர் 24, 2024 11:12 மணி

வேலிக்கருவை மரங்களை அகற்றி பழமரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் மெர்சிரம்யா தொடக்கம்

புதுக்கோட்டை

முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், வேலிக்கருவை மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  (27.11.2023) தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

பொதுமக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அதன்படி நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தென்னதிரையன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

நீதிமன்றம் அனைத்து மாவட்டங்களிலும்  வேலிக்கருவை  மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குளங்களில் உள்ள வேலிக்கருவை மரங்கள் அகற்றப்பட்டு, பழமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இக்குளத்தில் சேகரிக்கப்படும்  நீர் வீணாகாமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் பழமரக்கன்றுகள் நடுவதன் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள குரங்குகள் அனைத்தும் இந்த பழமரக்கன்றுகள் வளர்ந்தவுடன், இதில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக இங்கு வந்து வாழ தொடங்கும். மேலும் இது குரங்குகளுக்கு வாழ்வளிக்கும் திட்டமாகவும் இருக்கும்.

புதுக்கோட்டை
பழ மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதைப் போல  13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து மீதமுள்ள 484 (497-13) கிராம ஊராட்சிகளிலும் தொடங்கி வைத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலையில் சீமைக்கருவேல் மரங்கள் சூழ்ந்துள்ள அனைத்து இடங்களிலும் துவங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் குளங்கள், வாய்க்கால்கள், ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசால் செயல் படுத்தப்படும் இதுபோன்ற நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) இளங்கோ தாயுமானவன், வட்டாட்சியர் கவியரசன், ஊராட்சித் தலைவர் ஆதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top