Close
நவம்பர் 22, 2024 1:22 காலை

புத்தகம் அறிவோம்… 1232 கிலோமீட்டர்..!

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. ஒன்று பணமதிப் பிழப்பு. மற்றொன்று கொரோனா பொது முடக்கம்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்க அந்தப் பெருந்தொற்றுச் சங்கிலியை உடைத்தெறிவதற்காக 2020 -ஆம் ஆண்டு மார்ச் 24  -அன்று இரவு 8.00 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பொது முடக்கத்தை அறிவித்தார்.

அவர் அறிவித்து 4 மணி நேரத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிட்டது. அது மூன்று கட்டங்களில் மே மாதம் 31 வரை அடுத்தடுத்து நீடிக்கப்பட்டது. கொரானா வைரஸ் பெருந் தொற்றுக்கு அளிக்கப்பட்ட உலகிலேயே மிகக்கொடூரமான செயல் விடைகளில் ஒன்றாக அது பரவலாகக் கருதப்படு கிறது.

இந்தப் பொது முடக்கத்தால் நாடு முழுவதிலும் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். உண்ண உணவின்றி வசிக்க இடமின்றி தவித்தனர். இதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் சொல்லி மாளாது.

நிராதரவாக நின்ற பெரும்பாலானோர் வேறுவழியின்றி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தங்களுடைய கிராமங்களுக்கு குழந்தை குட்டிகளுடன் நடந்தே பயணப்பட்டனர். அந்த நெடுந்தூரப் பயணம் பலருக்கு இறுதி பயணமாக முடிந்தது.

பிழைப்புக்காக பீகாரிலிருந்து புலம்பெயர்ந்திருந்த ஏழு தொழிலாளர்கள் அதே போன்ற பயணத்தை தங்களுடைய சைக்கிளில் மேற்கொண்டனர். அந்த 1232 கிலோமீட்டர் நெடுந்தூரப் பயணம் ஏழுநாட்களும் ஏழு இரவுகளும் நீடித்தது.

உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் தொடங்கி அவர்களுடைய சொந்த ஊரான சகர்ஸாவில் முடிந்த அந்த பயங்கரமான பயணத்தின்போது அவர்கள் காவலர்களின் லத்தியையும், கீழ்த்தரமான அவதூறுகளையும் எதிர்கொண் டனா்.

கடும் பசியையும், களைப்பையும், உறைய வைத்த பயத்தையும் எதிர்த்துப் போராடினர். அத்தனையையும் எதிர்கொண்டு, சமாளித்து வெற்றி பெற்ற கதைதான் 1232 கி.மீ. இந்த நீண்ட பயணத்தை வினோத் காப்ரி (இந்த நூலின் ஆசிரியர்) ஆவணப்படமாக்கியுள்ளார். வழக்கமான ஆவணப்படமல்ல. இவர்களுடைய பயணத்தை அவர்கள் போக்கிலேயே படமாக்கியிருக்கிறார்.

இந்த நூல் ஒட்டுமொத்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் ‘இந்து’ ராம். நாகலட்சுமி சண்முகம் சிறப்பாக நமக்குத் தமிழில் தந்திருக்கிறார்.மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ்  வெளியீடு, விலை-ரூ .350.
மற்றொரு நிகழ்வு…டெல்லி குரு கிராமத்திலிருந்து பிகாரில் உள்ள தர்பங்காவிற்கு 1300 கி.மீ. தொலைவுக்கு உடல்நலமில்லாமல் இருந்த தன் தந்தையை, 15 வயது ஜோதிகுமாரி, சைக்கிளிலேயே அழைத்து வந்தார் என்பது ஒரு சாதனை நிகழ்வு (The Hindu 24.5.2020.).

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top