Close
நவம்பர் 23, 2024 11:05 காலை

ஆக்ஸ்ஃபோர்ட் நகரில் மாவீரர் தினம்..

இங்கிலாந்து

ஆக்ஸ்போர்ட் நகரில் மாவீரர் நினைவு நாள்

ஆக்ஸ்ஃபோர்ட் நகரில் மாவீரர் தினம்..

உலகத் தமிழர் வரலாற்று மையம் (நவ.27), மாவீரர்கள் நினைவேந்தல் நிகழ்வை இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது.

விழா ஏற்பாடு மிக அருமையாக, பிரமாண்டமாக இருந்தது. ஒரு விழா, ஒரு நிகழ்ச்சி நடைபெற அது நிகழும் இடம் நிகழ்விற்கான சூழல் தேர்வு என்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் தேர்வு செய்த சுமார் 100 ஏக்கர் பரப்புள்ள பரந்து விரிந்த வெளி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.

தான் பிறந்த நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்தவரையே மாவீரர் என்று அழைக்கும் வழக்கம் அன்று முதல் இன்று வரை நம்மிடையே உள்ளது. இம்மாவீர் அனைவரும் நம் வணக்கத் திற்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள். வீரர்கள் இறந்த பின் அவர்கள் நினைவாக வருடந்தோறும் கார்த்திகை மாதம்  நவம்பர் 27 ம் நாள் காந்தள் பூவை வைத்து அவர்களின் நினைவிடங்களில், ஈழ விடுதலைக்காக தம் இன்னுயிரை கொடுத்த அந்த மாவீரர்களை நினைவு கூறும் நாள்.

மாவீரர் நாள் என்பது தமிழீழ போராட்டத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவேந்துவதற்கான ஒரு அடையாள/ குறியீட்டு நாள்.

முதலாவது மாவீரரான செல்வச்சந்திரன் சத்தியநாதன் என்கிற லெப்டினன்ட் சங்கர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர். இராணுவத்துக்கு எதிரான போரில் பங்கேற்று வழிநடத்தியவர். சாவகச்சேரி காவல் நிலையத் தாக்குதலில் காயமடைந்த அவர் மறைவிடத்தில், சிகிச்சை பெற்று வந்த வேளையில் அப்பகுதி இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டது. மீண்டும் காயமடைந்தார். தமிழ்நாட்டிற்கு படகு மூலம் சென்று சிகிச்சை பெற்றபோது, சிகிச்சை பலனின்றி 27.11.1982 ஆம் நாள் வீர மரணமடைந்தார்.

இந்த கார்த்திகை மாதம் நவ 27  -ஆம் நாள், புலிகள் இயக்கத்தில் முதலில் இராணுவத்தினரால் பலியான பிரபாகரனின் நண்பரும், ஆரம்பகால போராளியும் ஆன சார்லஸ் அவர்களின் இறந்த நாள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாகத்தான் தேசியத் தலைவர் தனது மூத்த மகனுக்கு சார்லஸ் என பெயர் வைத்தார். இறுதி யுத்தத்தின் போது அவரும் இறந்து விட்டார்.

தொடக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 1990 களின் மத்தியில்தான் சங்கர் வீரமரணம் அடைந்த நேரமான மாலை 6.05 மணிக்கு தீபம் ஏற்றும் நடைமுறை வந்தது. மாவீரர் பாடல் 1992  -இல் இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களின் நடைமுறைகள் உருவாக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டளவில் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களின் முகப்பும், ஒரே மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இது தான் மாவீரர் நாளின் சுருக்கமான வரலாறு. இது உலகெங்கிலும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.

வாரத்தின் வேலை நாளாக இருந்தாலும் நேற்று தங்களின் நேரத்தை ஒதுக்கி, நமக்காக நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு, வீரவணக்கம் செலுத்த வந்த தமிழ் சொந்தங்களின் எழுச்சியை காண முடிந்தது. ஒரு மொழி, ஒரு இனம் இங்கே அனைவரையும் ஒன்றிணைத்திருக்கிறது.நம் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பிரதிபலித்த கலை நிகழ்வுகள் அனைத்தும் அருமை.

போக்குவரத்து ஒழுங்கு, வாகனம் நிறுத்தத்திற்கான ஏற்பாடு, உணவு அங்காடி, மலர் புத்தக விற்பனை மையம் என எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் மிக தெளிவாக திட்டமிடப்பட்ட விதம் பாராட்டும்படி இருந்தது.

மாவீரர்கள் விதைத்து சென்ற இன உணர்வும், மொழி உணர்வும் இங்கே இங்கிலாந்தில் விருட்சமாக வளர்ந்திருக்கிறது. விடியலை நோக்கிய நம் பயணம் வீறுகொண்டு எழட்டும்..

பின்குறிப்பு: ஈழப்போராட்டத்தில் ஈர்ப்பு இல்லாதவர்கள் இந்த பதிவை கடந்து செல்ல வேண்டுகிறேன். எந்த ஒரு போராட்டக் குழுவின் மீதும் எல்லோருக்கும் ஒருமித்த கருத்துகள் இருக்க வேண்டியதில்லை.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top